ரோலர் ஸ்கேட்டிங் சாகசம் புரியும் கலைஞர். (அடுத்த படம்) எத்தியோப்பியா கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி. 
வாழ்வியல்

சர்க்கஸ் கலையை வாழ வைக்க சலுகைகளை அறிவிக்குமா தமிழக அரசு?

ஆர்.ஆதித்தன்

கோவை: அந்தரத்தில் தொங்கி ஊஞ்சல் ஆடுதல், உடம்பை வில்லை போன்று வளைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ், மரணக்கிணற்றில் பைக்கை ஓட்டுதல், நகைச்சுவை தரும் கோமாளிகள் உள்ளிட்ட பல்வேறு வியத்தகு நிகழ்ச்சிகளை நடத்தி கரணம் தப்பினால் மரணம் என சர்க்கஸ் கலைஞர்கள் காட்டும் அதிரடி சாகசங்களை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கைதட்டி ரசிக்காமல் இருந்துவிட முடியாது.

இப்படி உயிரை பணயம் வைத்து சாகசம் புரியும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பது எதிர்கால தலைமுறையினரையும், ரசிகர்களையும் வைத்து தான் உள்ளது. தொழில் நகரான கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பது குறைவாகவே உள்ளன. அவ்வப்போது வ.உ.சி. பூங்காவில் நடைபெறும் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வந்து பார்த்து வருகின்றனர்.

மக்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய இடமாக உள்ள கோவை - வ.உ.சி. பூங்காவில் சமீபகாலமாக தொடர்ந்து வணிக ரீதியிலான கண்காட்சி, பொருட்காட்சி ஆகியவை மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதனால் சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. கட்டணம் அதிகம் என்பதாலும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் வ.உ.சி. பூங்காவில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வ.உ.சி. பூங்காவில் ஜெமினி சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர். ஆனால், வ.உ.சி. பூங்காவில் தொடர்ந்து வணிக ரீதியிலான கண்காட்சி, பொருட்காட்சி நடப்பதாலும் நிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும் சர்க்கஸ் நடைபெறும் இடம் திருச்சி சாலை சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகில் உள்ள தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜெமினி சர்க்கஸ் மேலாளர் சேது மோகனன் கூறியதாவது: ஜெமினி சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி கடந்த 1951-ல் இருந்து நடந்து வருகிறது. மறைந்த பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, வாஜ்பாய் என பல முக்கியத் தலைவர்களும் ஜெமினி சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்துள்ளனர்.தமிழகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியும் எங்களின் சர்க்கஸை கண்டு களித்துள்ளார்.

மேலும், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நடித்த பறக்கும் பாவை, நடிகர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்களில் சர்க்கஸ் காட்சிகள் முக்கிய இடம் பிடித்தன. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழக மக்கள் சர்க்கஸுக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோவை மக்களும் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நல்ல ஆதரவை தந்து வருகின்றனர். எங்கள் குழுவில் 80 சர்க்கஸ் கலைஞர்கள் உட்பட 200 பேர் உள்ளனர். இந்த 200 பேரின் ஊதியத்தை நம்பித்தான் அவர்கள் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் சர்க்கஸ் நடத்தி வருகிறோம். சாகச கலைஞர்களின் வாழ்வாதாரமாக உள்ள சர்க்கஸ் நிகழ்ச்சி இப்போது அழிந்து வரும் கலையாக உள்ளது. இந்த சர்க்கஸ் கலையை எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் மாநில அரசுகள் உதவ வேண்டும். கோவையில் வ.உ.சி. பூங்காவில் இடம் கிடைக்கவில்லை. இதனால் திருச்சி சாலையில் உள்ள தனியார் இடத்தில் நடத்தி வருகிறோம்.

நகர பகுதியில் இருந்து தூரமாக சர்க்கஸ் நிகழ்ச்சி நடப்பதால் மக்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. வரும் காலங்களில் சலுகை கட்டணத்தில் வ.உ.சி. பூங்காவில் சர்க்கஸ் நடத்திட அரசு உதவி செய்ய வேண்டும். குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் சர்க்கஸ் நடத்திட சலுகைகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் சலுகைகளை அறிவித்து எதிர்கால தலைமுறையினருக்கு சர்க்கஸ் கலையை எடுத்து செல்ல உதவிட வேண்டும்.

கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் 1 மணி, 4 மணி, 7 மணி என மூன்று காட்சிகள் சர்க்கஸ் நடத்தி வருகிறோம். இதில் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுதல், எத்தியோப்பியா கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக் என 28 சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT