மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாச்சலம் பாரம்பரிய நடைபயணத்தில் தகவல் தெரிவித்தார்.
மதுரை மாடக்குளம் கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலையடிவாரத்தில் பாரம்பரிய நடைபயணம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா இன்று தானம் அறக்கட்டளை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை, டிராவல்ஸ் கிளப், இன்டாக் மற்றும் களஞ்சியம் மகளிர் குழுக்கள் சார்பில் நடைபெற்றது.
தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாச்சலம் கூறுகையில் மாடக்குளம் கண்மாய் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடைகள் உள்ளது. கண்மாய் குறித்து அய்யனார் கோயில் கல்வெட்டுக்கள் ஓலைச்சுவடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்மாயின் மடைகளை பாதுகாத்து தண்ணீர் பாய்ச்சுவதற்கு அவர்களுக்கு பாண்டியர் காலத்தில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. தாலுகா அந்தஸ்தில் இருந்த மாடக்குளம் தற்போது மாநகராட்சியில் உள்ளது என்றார்.
இதில், காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கு.சேதுராமன் பேசுகையில், பொங்கல் விழா இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து இந்தோனேசியா, மலேசியா தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிக்க உதவிய கதிரவன், கால்நடைகள், நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மாநிலங்களுக்கேற்றவாறு மகரா சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது என்றார்.
இதில் , சுற்றுலா ஆலோசகர் கே.பி.பாரதி,பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஹரி பாபு ஆகியோர் கையேடு வழங்கினார். இதில் களஞ்சியம் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.