வாழ்வியல்

புத்தாண்டு சபதங்களை உடைக்காமல் உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள்... - சில ஆலோசனைகள்

ஷாலினி

2025 புத்தாண்டு இனிதே புதிய நம்பிக்கையுடன் பிறந்துவிட்டது. அப்றம் என்ன... ‘இந்த ஆண்டுக்கான உங்கள் ரெசல்யூஷன் என்ன?’ என்பதுதான் அதிகம் கேட்கப்படும் கேள்வி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ரெசல்யூஷன் இருக்கும். குறிப்பாக ‘நான் டயட் இருந்து ஸ்லிம் ஆக போகிறேன், போன் பார்ப்பதை குறைக்க போகிறேன், நல்ல சம்பளத்துக்கு வேறு கம்பெனிக்கு மாற வேண்டும்’ என்பார்கள். இதில் ஹைலைட்டான் ஒன்று என்னவென்றால், ‘இந்தப் புத்தாண்டில் எப்படியாவது நான் ஜிம்மில் சேர வேண்டும்’ என்பதுதான்.

எப்படியாவது முட்டிமோதி ஓன்றை செய்து விட நினைப்போம். ஆனால், அதற்கும் பல முட்டுக்கட்டைகள் உடனே வந்து நிற்கும். இன்றைய கால கட்டத்தில் உடல் பருமன் (obesity) குறித்தான விளம்பரங்களும் வீடியோக்களும் அடிக்கடி கண்களில் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மூலை முடுக்கெல்லாம் ஜிம்கள், கருத்தரிப்பு மையங்களாக பெருகிவிட்டன. உடல் பருமனைக் குறைப்பதற்கான பாதுகாப்பான வழிமுறைகளில் முக்கியமானது டயட்.

டயட் ஆரம்பித்தால், நிச்சயம் கிரேவிங்ஸ் வரும். ஒரு நாள் தானே... நண்பர்களுடன் சென்று ‘பீட்ஸா சாப்பிடலாம், ஒரு பில்டர் காபி குடிக்கலாம், பிரியாணி சாப்பிடலாம்’ என ஆரம்பிக்கும். பின்னர் அதுவே தொடர்கதை ஆகிவிடும். அதைக் கட்டுப்படுத்தும் டெக்னிக்கை அறிந்துகொண்டாலே, எளிதில் நமது இலக்கை தொட்டுவிடலாம். பலரும் அந்த டெக்னிக் தெரியாமல்தான் பலரும் வெயிட்லாஸ், ஃபிட்னஸ் சபதத்தில் கோட்டை விடுகிறோம்.

30 வயதை எட்டுவதற்குள், பல ஆண்கள், பெண்கள் 'அங்கிள்’ ‘ஆன்ட்டி’ என அழைக்கும் அளவுக்கு ​எடை கூடி போகிறார்கள். 'தினமும் நமக்கு பிடித்தமான உணவை ‘போதுமான அளவு’ சாப்பிட்டாலே போதும்... வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சி செய்தால் அதுவே தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும். ஒருவருடைய உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணியாக அமைகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

இது தொடர்பாக நம்மிடம் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்ட அவர், “புத்தாண்டு சபதமாக நான் உடல் எடையை குறைக்க வேண்டும் என டயட் பிளான் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், அவர்களுக்கு பிடித்தமான உணவை வைத்தே உடல் எடையை குறைக்க ஆலோசனை வழங்குவேன். ஒரு நாள், இரண்டு நாட்களில் எடையை குறைக்க முடியாது. அவர்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட பரிந்துரைப்பேன். அப்போதுதான் அவர்களும் அதை விரும்பி செய்வார்கள். அதற்கான ரிசல்டும் முழுமையாக கிடைக்கும். பிடிக்காததை ஒருபோதும் சாப்பிடக் கூடாது. அது உடம்பிலும் ஒட்டாது என்பார்கள்.

உடல் பருமன் என்பது ஒரு நோய் இல்லை. அது பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம். ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் அதையும், இதையும் செய்வார்கள். ஆனால் உடல் எடை குறைப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். 70 சதவிகிதம் நாம் உண்ணும் உணவும், 30 சதவிகிதம் நாம் செய்யும் உடற்பயிற்சியும்தான் நமது ஆரோக்கியமான உடலை பெற வழிவகை செய்கிறது. நமது தேவை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

‘நோ சொல்லுங்க’ - உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், ‘மைதா மாவு, சர்க்கரை மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி’ போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற உணவுகள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றாலும், அதற்காக, முற்றிலும் தவிர்த்துவிடுவதும் சாத்தியம் இல்லை.

சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் போன்றவை பயன்படுத்தலாம். அரிசிக்கு பதிலாக, தினை, சாமை, குதிரைவாலி, வரகு போன்ற தானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மைதாவில் செய்யப்பட்ட பொருட்கள் மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்பவை. சர்க்கரை அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சோடா, கோலா வகைகள் போன்றவை உடல் எடை கூடுவதற்குக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக டயட் இருப்பவர்கள் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை நினைத்துகூடபார்க்க கூடாது.

கிரேவிங்ஸ் இருந்தா இத பண்ணுங்க: டயட் இருக்கும் பலரும் சொல்லும் பிரச்சினைதான் இந்த கிரேவிங்ஸ். அந்த சமயங்களில் இனிப்பு, காரசாரமான உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும். புதிதாக டயட் இருக்க ஆரம்பித்திருப்பவர்கள், வெல்லம் சேர்க்கப்பட்ட ராகி லட்டு, எள்ளு உருண்டை, உலர்ந்த திராட்சை, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். வீட்டில் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை வாங்கி ஸ்டாக் வைக்காதீர்கள். அதைத் தேடிதான் நமது மனது ஓடும்.

நான் ரொம்ப பிஸி, காலையிலிருந்து நைட்டு வரைக்கும் வேலை செய்றேன் என கூறுவது, உண்மை புரியாமல் இளைஞர்கள் நாள் கணக்கில் பட்டினி கிடப்பது, இன்புளுயன்சர்களின் வீடியோக்களை பார்த்துவிட்டு அதை கண்மூடித்தனமாக ஃபாலோ செய்வது என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரின் உடல்வாகும் வேறுவிதமானது. அதன் தன்மைக்கு ஏற்ப, மருத்துவர்களையோ அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களையோ அணுகி செயல்படுவதுதான் முக்கியமானது.

பணமே தேவையில்லை: ஜிம்மில் சேர்ந்துதான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சரியான அணுமுகுறைகளுடன் ஒரு விஷயத்தை மேற்கொண்டாலே அதில் வெற்றி நிச்சயம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். எடுத்துக்காட்டாக யோகா, வாக்கிங், ஸ்கிப்பிங், வீட்டிலேயே டான்ஸ் ஆடலாம். சைக்கிள் ஓட்டலாம்... இவை எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நல்ல பலன்களை வாரி வழங்கக்கூடியவை.

சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது. போதிய அளவு உடற்பயிற்சி செய்வது சரியான நேரம் தூங்க வேண்டும் ஆகியவைதான் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. அழகாக இருப்பதைவிட ஆரோக்கியமாக இருப்பதே முக்கியமானது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக இருப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பது அவசியம். நீங்கள் எடுத்த புத்தாண்டு சபதத்தை பிரேக் செய்யாமல் இருப்பதற்கு, இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நடைமுறைபடுத்தினாலே போதும்” என்று கூறுகிறார் திவ்யா சத்யராஜ்.

பிடித்ததை மகிழ்வோடு செய்தால் அனைத்தும் சாத்தியமே... வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT