சென்னை: ‘பிரியாணி’.. இதுதான் இன்று பிரதான உணவாக அனைத்து வயதினரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. சென்னையில் பிரியாணி அதிகளவில் நுகரப்படுவதை உணவு விநியோகிக்கும் ஆன்லைன் நிறுவனங்களே தெரிவித்துள்ளன. இந்த அளவுக்கு பிரியாணி மக்களின் நாவில் நீங்கா இடம் பெற்றதற்கு, பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களும், சுவையூட்டிகளுமே காரணம். ஒரு காலத்தில் பகல்பொழுதில் சாப்பாட்டுக்கு பதில் பிரியாணி சாப்பிட்ட காலம் மாறி, காலை, மதியம், மாலை, இரவு, நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
அதிலும் குறிப்பாக இரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பிரியாணி கிடைக்கும் இடத்தை தேடி இளசுகள் அலை மோதுகின்றனர். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகள், மேல் தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரவு நேர பிரியாணி கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இரவில் பிரியாணி போன்ற உணவுகளை உட்கொள்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுதொடர்பாக, சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் மீனாட்சி பஜாஜ் கூறியதாவது: என்றாவது ஒரு நாள் மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. அதிலுள்ள பட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவை ஜீரணத்துக்கு உதவி செய்யும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது. ஆனால், பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது பாதுகாப்பானது இல்லை. சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு ஆபத்தானது.
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும்போது ஜீரணமாவதில் பிரச்சினை உள்ளது. அதனால் வரும் பிரச்சினை நெஞ்செரிச்சலா, நெஞ்சுவலியா என்பதை அவர்களால் கண்டறிய முடியாது. பிரியாணி சாதாரண நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் இணைநோய் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பை உண்டாக்கும். இதய நோய் உள்ளவர் இரவில் நன்றாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மதுவோ அல்லது குளிர்பானமோ குடித்தால், காலையில் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது.
கடைகளில், பலமுறை பயன்படுத்திய எண்ணெய், கெட்ட கொழுப்பு போட்டுக்கூட பிரியாணியை சமைத்திருக்கலாம். அதேபோல், அவர்கள் போடும் இறைச்சிகள் எந்த தரத்தில் இருக்கிறது என்பதுகூட நமக்கு தெரியாது. அதிகம் விற்பனையாகும் கடைகளில் முதலில் சமைக்கப்படும் பிரியாணியில் உள்ள இறைச்சி நன்றாக வெந்து இருக்கும். அடுத்தடுத்து அவசரமாக சமைக்கப்படும் பிரியாணியில் இறைச்சிகள் வெந்தும், வேகாமலும் இருக்கும். அதனை சாப்பிடும்போது டைபாய்டு வருவதற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், மதியம் வேகவைத்த முட்டையை இரவில் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் டைபாய்டு வரலாம். தயிர் பச்சடி செய்யும்போது தயிரில் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, ஆறிய பிறகு ஊற்ற வேண்டும். இல்லையென்றால், மஞ்சள் காமாலை வருவதற்கு வாய்ப்புள்ளது. பிரியாணி சாப்பிடும்போது மாவு சத்து, கொழுப்பு சத்து, புரதச் சத்து உள்ளே செல்கிறது.
ஆனால், நார் சத்து அளவு மிகவும் குறைவாக இருப்பதால், மலச்சிக்கல் வரலாம். தொடர்ந்து ஆட்டுக்கறியில் செய்யும் பிரியாணி, பரோட்டா குருமா சாப்பிட்டால், நார் சத்து இல்லாத காரணத்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
பிரியாணியை தொடர்ந்து சாப்பிடும்போது உடல் பருமன் அதிகரிக்கும். அதன்மூலம் இதய பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, பக்கவாதம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்புள்ளது. சிறார்கள் தொடர்ந்து பிரியாணி சாப்பிட்டால், உடல் பருமன் ஏறபடும். சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இரவு என்பது நன்றாக தூங்குவதற்கான நேரம். இரவில்உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
இரவில் எப்போதும், எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவை குறைவான அளவு சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இதே உணவை கூட நள்ளிரவு 11 மணிக்கு சாப்பிட்டால் இதயத்துக்கு பிரச்சினை ஏற்படலாம். அதனால், என்றாவது ஒருநாள் வீட்டில் பிரியாணி செய்து, தயிர் பச்சடி, கத்திரிக்காய் கிரேவி வைத்து குறைவாக சாப்பிட வேண்டும். மட்டன் பிரியாணியை விட சிக்கன் பிரியாணி சாப்பிடுவது சிறந்தது. முன்னதாக, கொஞ்சம் சாலட், சுண்டல் சாப்பிட்ட பிறகு பிரியாணி சாப்பிட வேண்டும். பிரியாணி சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால், பசியை போக்க, பிரியாணி ருசிக்கு அடிமையானவர்கள் கருத்து வேறுமாதிரியாக உள்ளது. அதிகளவில் பிரியாணியை ருசிக்கும் இளவட்டங்கள், பிரியாணி புத்துணர்ச்சி தருவதாக தெரிவிக்கின்றனர்.
ஐ.டி. ஊழியர் ஆக்னல்: நைட் ஷிப்ட் நேரத்தில் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்வதால், நள்ளிரவில் பசியெடுக்கும்போது, உடன் பணி செய்யும் நண்பர்கள் சேர்ந்து சாப்பிட செல்வோம். அந்தநேரத்தில், பிரியாணியை தவிர வேறு உணவு கிடைக்காது.
அதனால், நள்ளிரவில் பிரியாணியை சாப்பிட்டு வந்தோம். ஒருகட்டத்தில், விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் கூட, இரவு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட வேண்டும் எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
அதனால், நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி இரவு பிரியாணி கடையை தேடி கண்டுபிடித்து சாப்பிட தொடங்கிவிட்டேன். இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிட்டால், செரிமான பிரச்சினை வரும் என்பது தெரியும், இருந்தாலும் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.
தனியார் நிறுவன ஊழியர் ஏ.சரோஜினி: நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவதற்கு யூடியூப் வீடியோக்களும் ஒரு முதன்மை காரணமாக இருக்கிறது. இரவில் பிரியாணி சாப்பிடுவது போன்ற போட்டோக்களை சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்குடன் பதிவேற்றம் செய்து தங்களையும் பப்ளிசிட்டி செய்து கொள்ளவே பலரும் இரவு நேர பிரியாணி கடைகளுக்கு படையெடுக்கின்றனர். இரவு நேர பிரியாணி சாப்பிடும் எனது நண்பர்கள் பலரும் இதுவரை எந்தவித பக்கவிளைவுகளுக்கும் ஆளானதாக என்னிடம் கூறியது கிடையாது.
விளம்பரத் துறை ஊழியர் சபானா: மாடலிங், விளம்பரம் தொடர்பான படப்பிடிப்புகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் முடிவடையும். எனவே, பணிகளை முடித்து விட்டு வரும்போது பிரியாணி சாப்பிட்டால் மனதுக்கு திருப்திகரமாக இருப்பதுடன் பசியும் அடங்கிவிடும். மற்ற உணவுகளைபோல் அல்லாமல் பிரியாணி என்பது என் போன்ற உணவு பிரியர்களின் உணர்வுடன் கலந்த ஒன்றாகும். அதை சாப்பிடுகையில் தினசரி மனஇறுக்கம், பணிச்சுமை உள்ளிட்ட பாரங்கள் நீங்கிமனம் மகிழ்ச்சியான நிலையை அடையும்.
திருமுல்லைவாயில் ஸ்வர்னா: பிரியாணி மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு சமூக வலைதளமும் ஒரு காரணம். சென்னையில் எங்கெல்லாம் இரவுநேர பிரியாணி கிடைக்கிறது என்பதும், பிரியாணியின் சுவை குறித்த முழு விமர்சனங்களுக்கும் நாமும் ஒருமுறை சுவைத்துவிட வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
அந்தவகையில் இரவுநேர பிரியாணி சாப்பிடுவது என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக மாறியிருக்கிறது. நள்ளிரவில் எடுத்துக் கொள்ளும் உணவு அடுத்த நாள் சில வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும், என்றாவது ஒரு நாள்தான் சாப்பிடுகிறோம் என்பதால் தவிர்க்க முடிவதில்லை.
பட்டாபிராம் ஞானசம்பத்: இளைய தலைமுறையினர் நள்ளிரவு நேரங்களில் பிரியாணி கடைகளை தேடிப் பிடித்து சாப்பிட தொடங்கியுள்ளனர். இரவு வேலை பார்க்கும் இளைஞர்கள்தான் அதிகம் சாப்பிடுகின்றனர். ஏற்கெனவே இரவு நேர பணியால் சோர்வாக காணப்படும் அவர்கள், தவறான உணவு முறையால் மேலும் உடல் பலவீனமாக வாய்ப்புள்ளது. எவ்வளவு எடுத்துக் கூறினாலும் இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து இரவு பிரியாணி சாப்பிட செல்வதை தவிர்ப்பதில்லை.
வண்ணமயமான உணவு! - நமது வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வேண்டும் என்றால், நாம் சாப்பிடும் உணவும் வண்ணமயமாக இருக்க வேண்டும். தங்காளி, கேரட், பீன்ஸ், கீரை இப்படி உணவு வண்ணமயமாக இருக்க வேண்டும். இந்த உணவில்தான் நுண் சத்துகள் அதிகம் இருக்கும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கும்.
ஆந்தை மாதிரி குண்டாக மாறும் மனிதர்கள்! - ஆந்தை இரவில் தூங்காமல் விழித்துக் கொண்டே இருக்கும். ஆந்தைகள் தோற்றத்தில் குண்டாக இருக்கும். அதுவே, வானம்பாடி பறவைகள் (Larks) பார்ப்பதற்கு அழகாக சின்னதாக இருக்கும். அவை, இரவில் தூங்கி அதிகாலையில் எழுந்து பகலில் உணவு தேடுபவை. ஆந்தையோ, அதுமாதிரி இல்லாததால்தான் குண்டாக உள்ளது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் எப்போது தூங்க வேண்டுமோ அப்போது தூங்காமல் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். அதனால்தான் சிறார்களும், பெரியவர்களும் ஆந்தையைபோல் உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள்.
வண்ணமயமான உணவு! - நமது வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வேண்டும் என்றால், நாம் சாப்பிடும் உணவும் வண்ணமயமாக இருக்க வேண்டும். தங்காளி, கேரட், பீன்ஸ், கீரை இப்படி உணவு வண்ணமயமாக இருக்க வேண்டும். இந்த உணவில்தான் நுண் சத்துகள் அதிகம் இருக்கும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கும்.