வாழ்வியல்

கொம்பூதும் கலையை மீட்டெடுக்கும் ‘வேம்பத்தூர் வேலு’!

இ.ஜெகநாதன்

சிவகங்கை: பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக கொம்பூதும் கலை உள்ளது. பழங்காலத்தில் விலங்குகள், பறவைகளை விரட்டவே கொம்பூதி வந்துள்ளனர். மன்னர் காலங்களில் போர் அறிவிப்பு கருவியாகவும் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் கொம்பூதி வந்துள்ளனர்.

கிராமங்களில் குறிப்பிட்ட சிலருக்கான கலையாக மட்டுமே இருந்துள்ளது. அவர்கள் மட்டுமே பரம்பரை, பரம்பரையாக பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் இக்கலையை கற்காமல் போனதால், அழியத் தொடங்கியது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் இக்கலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரைச் சேர்ந்த எஸ்.வேலு (62).

இவருக்கு 2022 - 23-ம் ஆண்டு கலைப் பண்பாட்டுத் துறை கலைநன்மணி விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது அவர் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கொம்பூதும் கலை தொடர்பாக பயிற்சி அளித்து வருகிறார். மேலும் பள்ளி மாணவர்களும் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர்.

இதுகுறித்து வேம்பத்தூர் எஸ்.வேலு கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொம்பூதும் கலை தெரியும். அவர்கள் அந்தந்த கிராம கோயில் திருவிழாக்களில் மட்டுமே கொம்பூதுவர். வெளியூர்களுக்குச் செல்வதில்லை. கடந்த 30 ஆண்டுகளில் கொம்பூதும் கலை பெரிய அளவில் அறியப்படாமல் இருந்தது. அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதற்காக ‘இசை, நாடக, நாட்டுப்புற கலைஞர்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கொம்பூதும் கலைஞர்களை இணைத்து வருகிறேன். எனது மகன் பழனிஆறுமுகமும் (29) கொம்பூதும் பயிற்சி அளிக்கிறார். கொம்பு பித்தளையில் செய்யப்படும். நாங்கள் பயன்படுத்தும் கொம்பு 5 கிலோ முதல் 7 கிலோ எடை இருக்கும். தற்போது ஒன்றரை முதல் 2 கிலோ வரையிலான எடையில் தயாரிக்கின்றனர்.

நான் பொன்னியின் செல்வன் திரைப் படத்தில் கொம்பூதியுள்ளேன். பள்ளி கலைத் திருவிழாவில் கொம்பூதும் கலையை சேர்த்த தமிழக அரசு, அதற்கான பயிற்சி யாளர்களை நியமிக்கவில்லை. கொம்பூத பயிற்சியாளர்களை நியமித்தால் இக் கலை மேலும் வளரும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT