ராமநாதபுரம்: மாநில அளவில் கைத்தறி கைவண்ணத்தில் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்ற பரமக்குடி நெசவாளர்களுக்கு கைத்தறித்துறை அலுவலர்கள், நெசவாளர் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 11,257 கைத்தறி நெசவாளர்கள் இயங்கி வருகின்றனர். இப்பகுதியில் கைத்தறி பருத்தி சேலைகள், செயற்கைப்பட்டு, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிற விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2023-2024-ம் ஆண்டிற்கு தமிழக அளவில் பருத்தி பிரிவில் மாநில நெசவாளர் விருதை பரமக்குடியைச் சேர்ந்த அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பிரேமா, தூக்கணாங்குருவி காட்சியினை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக முதல் பரிசாக ரூ.5 லட்சத்தையும் சான்றிதழையும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (செப்.25) சென்னை தலைமைச் செயலகத்தில் பெற்றார்.
மேலும், பரமக்குடி லோக மாணிய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அலமேலு, ராமேசுவரம் பாம்பன் பாலம் திறப்பு மற்றும் கடல் நீர் காட்சிகளை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சத்தை தமிழக முதல்வரிடம் பெற்றார். மாநில அளவில் முதல் இரண்டு பரிசுகளை பெற்ற பரமக்குடி நெசவாளர்களுக்கு பரமக்குடி கைத்தறித்துறை உதவி இயக்குநர் சேரன் மற்றும் கைத்தறி துறை அலுவலர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.