கல்வெட்டுகள் 
வாழ்வியல்

ராமநாதபுரம்: மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு துண்டுக் கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இடிந்த நிலையில் உள்ள கள்ளிக்கோட்டை சிவன் கோயிலை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இரு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து படியெடுத்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது; இந்த கோயிலில் சிவன் சன்னிதியில் ஆறு துண்டுக் கல்வெட்டுகளையும், அம்மன் சன்னிதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். தற்போது புதியதாக சிவன் சன்னிதியில் முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் இந்த இரண்டு துண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் கி.பி.13-ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் ஆகும்.

இதில் இரண்டு வரிகள் உள்ள ஒரு கல்வெட்டில் ‘ஸ்ரீகோமாறபன்மறான திரிபுவனச் சக்கரவத்தி’ எனக் குறிப்பிடப்படுவது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனையும், மற்றொரு 4 வரிகள் கொண்ட கல்வெட்டில், இக்கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் ஐப்பசிக் குறுவை விளையும் கலத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி) விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மிழலைக்கூற்றம், திருக்கானப்பேற் கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கோயில் வரலாறு: முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் காலத்தில், மூன்றாம் குலோத்துங்கசோழன், பாண்டியநாட்டில் வீராபிஷேகம் செய்ய முனைந்தபோது அதை எதிர்த்ததால், மட்டியூர், கள்ளிக்கோட்டை ஆகிய ஊர்களில் போர் நடந்தது. பாண்டியர் - சோழர் போருக்குப் பின், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கள்ளிக்கோட்டையில் பள்ளிப்படைக் கோயிலாக இக்கோயில் கட்டடப்பட்டிருக்கலாம்.

கோயிலில் மேற்கு நோக்கிச் சாய்ந்த நிலையில் சிறியலிங்கம், அம்மன் சன்னிதியில் அரைத்தூண்களில் நர்த்தன கணபதி, முருகன், நின்ற நிலையில் லகுலீசபாசுபதரின் சிறிய சிற்பங்கள் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு கைகளுடன் நின்றநிலையிலான அரியவகை லகுலீசபாசுபதர் சிற்பம் உள்ளது.

பெரும்பாலும் இதுவரை, அவர் சிற்பங்கள் அமர்ந்த நிலையிலேயே கிடைத்துள்ளன. இங்குள்ள ஒரு துண்டுக்கல்வெட்டு, இக்கோயிலில் இருந்த கோளகி மடம், அதன் ஆசாரியர் அவருடைய சிஷ்யர்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. சைவ மடங்களில் துறவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வந்த இதில் பாசுபதம், லகுலீச பாசுபதம், காளாமுகம் ஆகிய பிரிவினர் இருந்துள்ளனர்.

மேலும், அம்மன் சன்னிதியில் உள்ள கல்வெட்டில், நாடாமங்கலமான சுந்தரத்தோள் நல்லூர் என இவ்வூரும், நயினார் தவச்சக்கரவத்திஸ்வரமுடைய நயினார் என இறைவனும் அழைக்கப்பட்டுள்ளது. பாண்டியர், சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த இடிந்து அழியும் நிலையில் உள்ள இக்கோயிலை, பழமை மாறாமல் புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராஜகுரு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT