மதுரை: மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பராமரிப்பு இல்லாத பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள குன்றுகளில், அரிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது இந்த பாறை ஓவியங்கள் பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக, மதுரை இயற்கை பண்பாட்டு அமைப்பு சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது: பழங்கால மக்கள் குகைகளில் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். அந்த குகைகளில் உள்ள பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். வெவ்வேறு விதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் அவை காணப்படுகின்றன. தொல் பழங்காலத்தைச் சேர்ந்த சிவப்பு, வெள்ளை, கருப்பு நிற பாறை ஓவியங்கள் மதுரை மாவட்டத்தில் காணப்படுகின்றன.
கிடாரிப்பட்டி கிடாரிமலை, மேட்டுப்பட்டி சித்தர் மலை, விக்கிரமங்கலம் உண்டாங்கல் மலை, கருங்காலக்குடி பஞ்ச பாணடவர் மலை, கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை, அயோத்திபட்டி மூன்று மலை, மலைப்பட்டி புத்தூர் மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்ச பாண்டவர்மலை, முத்துப்பட்டி பெருமாள் மலை, திருவாதவூர் ஓவா மலை, தே.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி மலை, பூசாரிப்பட்டி பாறைப்பள்ளம் மலை, புலிப்பட்டி புலிமலை, தொட்டப்ப நாயக்கனூர் தெற்குமலை உள்ளிட்ட 14 மலைக்குன்றுகளில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இன்று இவை உரிய பாதுகாப்பு, பராமரிப்பின்றி அழிந்து வருகிறது.
இந்த மலைகளுக்கு வரும் பொதுமக்கள் இவற்றின் முக்கியத்துவம் அறியாமல் அதன் மீது கிறுக்குவது, மையை பூசுவது என அதை சிதைத்து வருகின்றனர். வரலாற்று சின்னங்களை அழிப்பது சட்டப்படி குற்றம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
மதுரை நகருக்கு அருகில் இருக்கும் பூசாரிப்பட்டி பாறைப்பள்ளம், கிடாரிப்பட்டி மலைகள் பாறை ஓவியங்கள் சிதையும் நிலையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பாறை ஓவியங்கள் உள்ள தளங்களை பாதுகாக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் மக்களை பாதுகாக்கச் செய்ய வேண்டும். பாறை ஓவியங்கள் குறித்த வரலாற்று குறிப்புகளை, அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவிப்பு பலகையாக வைக்கலாம் பாறை ஓவியங்களை பார்வையிட வசதியாக பாதை, படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.