தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த அழகிய கட்டுமானங்களைக் கொண்ட கிணறு கண்டறியப்பட்டது. தஞ்சாவூரை சோழர், நாயக்க மன்னர்களைத் தொடர்ந்து மராட்டியர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் 110 ஏக்கரில் அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட தர்பார் மகால், ஆயுத கோபுரம், மணி கோபுரம், சார்ஜா மாடி ஆகியவை மன்னர்களின் நேரடி பார்வையில் பராமரிக்கப்பட்டு வந்தன. மராட்டியர்களுக்கு பின்னர் வந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்த அரண்மனை பாதுகாக்கப்பட்டது. தற்போது, அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர்களின் வம்சத்தினர் வசித்து வருகின்றனர்.
அரண்மனை வளாக கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேலானதாக உள்ளதால், இதை தமிழக தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அதை புனரமைப்பு செய்து வருகிறது. இதன்படி, ரூ.25 கோடியில் தர்பார் மகால், சார்ஜா மாடி, மணி கோபுரம், ஆயுத கோபுரம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மராட்டியர்களின் வம்சத்தினர் தங்கியுள்ள பகுதிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரண்மனை வளாகத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் பழமையான அழகிய கட்டுமானங்களைக் கொண்ட கிணறு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இடம் குப்பை மேடாக, செடி- கொடி, மரங்கள் வளர்ந்து கிடந்தன. அண்மையில் இந்த இடத்தை சுத்தம் செய்தபோது அந்தப் பகுதியில் தட்டையான செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவைக் கொண்டு கட்டப்பட்ட கிணறு தூர்ந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிணறை பழமை மாறாமல் புனரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறியது: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் குப்பைமேடாக இருந்த இடத்தை சுத்தம் செய்து, அங்கிருந்த செடி கொடிகளை அகற்றியபோது, அரச குடும்பத்தினர் பயன்படுத்திய அழகிய கட்டுமானத்துடன் கூடிய கிணறு இருப்பது தெரியவந்தது.
இந்தக் கிணற்றை தூர் வாரி, அதில் நீர் இருக்கும் வகையில் புனரமைத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, அரண்மனையில் கிருஷ்ண விலாச குளம் ஒன்று இருந்ததாக வரலாறு கூறுகிறது. அந்தக் குளத்தையும் கண்டுபிடித்து புனரமைத்தால், அரண்மனைப் பகுதியில் பெய்யும் மழைநீரை தேக்கி, நீர் ஆதாரத்தை உயர்த்தலாம் என்றார்