மதுரை: மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் வியாபாரி ஒருவர் அணில்களை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். மேலும், அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டி கவனம் ஈர்த்து வருகிறார்.
பொதுவாக வீடுகளில் நாய், புறா, கிளி, பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் சிலர் மகிழ்ச்சி கொள்வர். அந்த வரிசையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த வியாபாரி திருப்பதி (45) என்பவர் அணில்களை செல்லப் பிராணியாக வளர்க்கிறார். ஒத்தக் கடை- நரசிங்கம் சாலையில் எண்ணெய் கடை நடத்தும் இவர், சிறு வயது முதல் அணில், பூனை, வீட்டு விலங்குகள், பறவைகள் மீது ஆர்வம் கொண்டவர். திருப்பதியின் தாயாரும் செல்லப் பிராணிகள் மீது பரிவு காட்டுவாராம். அம்மாவும் பிள்ளையும் பிராணிகள் மீதான பாசத்தால் அணில்களையும் விரும்பி நேசித்து வளர்க்கிறார்கள்.
திருப்பதி தனது எண்ணெய்க் கடைக்கு அருகே உள்ள கோயில் மரத்திலிருந்து ஒருநாள் திடீரென அணில் குட்டி ஒன்று கூட்டிலிருந்து கீழே விழுந்துள்ளது. அதைப் பார்த்த அவர், அணில் குட்டியை கடைக்கு எடுத்து வந்து உணவளித்து பராமரிக்க ஆரம்பித்தார். அந்த அணிலும் திருப்பதியுடன் அன்பாக பழகத் தொடங்கியது.
திருப்பதி கடைக்கு வந்தவுடன் ‘டிச்சு’ என, செல்லப் பெயரிட்டு அழைத்ததுமே அந்த அணில் அவரது கையில் ஏறிக் கொண்டு தோளில் அமர்கிறது. கொஞ்ச நேரமாவது அதனுடன் கொஞ்சி விளையாடிய பிறகு அன்றைய வியாபாரத்தைத் தொடங்குகிறார் திருப்பதி.
வேலைக்கு நடுவில் அவரது தோளிலும் இடுப்பிலும் ஏறி விளையாடுகிறது டிச்சு. அவரோடு அணில் விளையாடுவதை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் வியந்து பார்க்கின்றனர். இப்படி ஒன்றல்ல ரெண்டல்ல ஏகப்பட்ட அணில் குட்டிகளை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் திருப்பதி. அவை வளர்ந்ததும் அவற்றை தானாகவே மரத்தில் ஏற்றிவிட்டு அதன் போக்கில் விட்டுவிடுகிறார் திருப்பதி. இப்படி கீழே விழுந்து காயம்படும் அணில், காக்கா உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சையளித்து அவை சரியானதும் மரத்தில் விட்டுவிடுகிறார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “அணில்களை வளர்ப்பதால் மகிழ்ச்சி கிடைக்கிறது. என் பிள்ளைகளைவிட இந்த அணில்கள் மீது அதிகமான பாசம் வைப்பேன். வீட்டில் குடும்பத்தினருக்கு சாப்பாடு இல்லாவிட்டால்கூட கவலைப்படமாட்டேன். ஆனால், அணில், பறவைகள் சாப்பிடாமல் இருக்காது. அணில்களை பராமரிப்பதால் பெரும்பாலும் வெளியூர்களுக்குச் செல்வதை தவிர்ப்பேன். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உடலில் புண் இருந்தால் அதற்கும் மருந்து போட்டு குணப்படுத்துவேன்” என்றார்.