மும்பை: அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்த சூழலில் அவரை மையமாக வைத்து பதிவு ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. உத்வேகம் அளிக்கும் பல வகை மக்களின் கதைகளை அவர் பகிர்வது வழக்கம். இது தவிர பல்வேறு வகையிலான பதிவுகளை அவர் பகிர்வார். அது அனைத்தும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் குறித்து பதிவிட்டுள்ளார்.
“நன்றாகப் பார்க்கவும். இந்த முகத்தை தான் விளையாட்டு களத்திலும், சமூக வலைதளத்திலும் கடுமையாக சில மாதங்களுக்கு முன்பு விமர்சித்து இருந்தீர்கள். இதோ அவர் கண் கலங்கி நிற்பதை பாருங்கள். அது அவரது மீட்சியின் வெளிப்பாடு.
இந்தப் புகைப்படத்தை எடுத்த போது அவர் மீண்டும் நாயகனாகி இருந்தார். டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், பதட்டம் நிறைந்த இறுதி ஓவரை வீசிய காரணத்துக்காகவும், இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய வீரர் என்ற வகையிலும். இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் வாழ்க்கை நம்மை வீழ்த்தினாலும் நம்மால் எழுச்சி காண முடியும் என்பதை தான்” என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, 3 ஓவர்களை வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி இருந்தார். அதில் 6 இன்னிங்ஸில் பேட் செய்து 144 ரன்கள் எடுத்தார். 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.