வெளியாரி கிராமத்தில் மறைந்த தாயார் முத்துக்காளியம்மாள் நினைவாக அவரது மகன்கள் கட்டிய கோயில் 
வாழ்வியல்

மறைந்த தாய்க்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய  மகன்கள் @ திருப்பத்தூர்

இ.ஜெகநாதன்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மறைந்த தாயாருக்கு ரூ.1 கோடியில் கோயில் கட்டி, 560 கிலோ ஐம்பொன் சிலை வைத்து மகன்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். பெற்றோரை சுமையாக கருதி முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் இந்த காலக்கட்டத்தில் தாயாருக்கு மகன்கள் கோயில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கருப்பையா- முத்துக்காளியம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ்குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கருப்பையாவின் வருமானம் போதாதநிலையில், முத்துக்காளியம்மாள் பால், துடைப்பம் விற்றும், தாலியை அடகு வைத்தும் தனது 3 மகன்களையும் பட்டதாரிகளாக்கினார். தற்போது மூவரும் தொழிலதிபர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் 63 வயதில் முத்துக்காளியம்மாள் உயிரிழந்தார். தாயின் மீதான பாசத்தால் அவருக்கு கோயில் கட்ட மகன்கள் முடிவு செய்தனர். கட்டிடக் கலை நிபுணர்கள் மூலம் ரூ.1 கோடியில் கோயிலை கட்டினர். மேலும் கோயில் கோபுரத்தில் தங்க கலசம் வைத்து, முத்துக்காளியம்மாளுக்கு 560 கிலோ எடையுள்ள 5 அடி உயர ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

நான்கு கால யாகசாலை பூஜை நடத்தி இன்று கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து முத்துகாளி வளர்த்த வீரன் என்ற மஞ்சுவிரட்டு காளை கோயில் முன்பு நிறுத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டது. இதுகுறித்து சண்முகநாதன், சரவணன், சந்தோஷ்குமார் ஆகியோர் கூறியதாவது: “விவசாய குடும்பத்தில் பிறந்த எங்களை இரவு, பகல் பாராமல் கூலி வேலை செய்து கல்லூரியில் படிக்க வைத்து பட்டதாரிகளாக்கினார் எங்கள் அம்மா.

நாங்கள் நல்லநிலைக்கு வந்தநிலையில் அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரின் தியாகத்தை எங்களது தலைமுறையினர் தெரிந்து கொள்ளவே கோயில் கட்டினோம். எங்கள் தாயார் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்த்து வந்தார். நாங்கள் வசதியானாலும், எங்களது தாயாரின் நினைவாக மாடுகளை வேலையாட்கள் மூலம் பராமரித்து வருகிறோம்,” என்று அவர்கள் கூறினார்கள்.

SCROLL FOR NEXT