வாழ்வியல்

புதுச்சேரி அரசு குழந்தைகள் பள்ளிக்கு ஏசி வாங்கித் தந்த பெற்றோர்!

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் பள்ளிகள் நாளை (ஜூன் 12) திறக்கப்படுகின்றன. புதுச்சேரி அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில், அரசு குழந்தைகள் பள்ளி ஒன்றுக்கு பெற்றோர் ஏசி வாங்கி தந்துள்ளனர்.

புதுவையில் 152 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலை, 44 உயர்நிலை, 44 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் பள்ளிகள் 273 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கடத்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோடைவெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. அனைத்து அரசு பள்ளிகளும் நாளை திறக்கப்படுகிறது. பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கான ஆயத்த பணிகளாக சுத்தப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நடைபெற்றன.

தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டி சுத்தப்படுத்துதல், கழிப்பறைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நாளை (புதன்கிழமை) பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகள் முழுமையாக சிபிஎஸ்சி பாட திட்டத்திற்கு மாறுகிறது. அதோடு பள்ளி திறப்பு நாளிலேயே பாட புத்தகங்கள் வழங்கவும் கல்விதுறை நடவடிக்கை எடுத்துள்ளது.

குழந்தைகள் பள்ளிக்கு ஏசி வழங்கிய பெற்றோர்: புதுவை லப்போர்த் வீதியில ‘எக்கோல் ஆங்கிலேஸ்’ அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. அரசு பள்ளிகளில் மாதிரி பள்ளியாக உள்ளது. இங்குள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்பறையில் மாணவர்களின் கற்பனை வளத்தையும், கல்வி கற்கும் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியில் குழந்தைகள் படிக்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு, படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் தேசியகீதம், பாரதியார் பாடல்களை பாடி இசையையும் கோர்த்து வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, அந்த பள்ளியை சேர்ந்த பெற்றோர்களான முரளி-மங்கையர்கரசி தம்பதியினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகள் படிக்கும் வகுப்பறைக்கு ஏசி வாங்கி தந்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளை அணுகி அதன் பயன்பாட்டு தொடர்பான முடிவுகளை பள்ளி தரப்பில் எடுக்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT