மும்பை: அண்மையில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை சந்தித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில், அந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் பரஸ்பரம் பேசிக் கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். அதோடு இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
86 வயதான ரத்தன் டாடா. சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பை கவனித்தவர். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. இப்போது அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார்.
51 வயதானவர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1989 முதல் 2013 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதன் மூலம் 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மொத்தம் 100 சதங்களை பதிவு செய்துள்ளார்.
அண்மையில் ரத்தன் டாடா மற்றும் சச்சின் டெண்டுல்கர் என இந்த இரண்டு ஆளுமைகளும் சந்தித்துள்ளனர். அது குறித்து சச்சின் தெரிவித்தது. “மறக்கமுடியாத உரையாடலாக இது அமைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாடாவை சந்தித்தேன். அவருடன் நேரம் செலவிடும் வாய்ப்பும் கிடைத்தது.
நாங்கள் இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசிக் கொண்டோம். வாகனங்கள், சமூகத்துக்கான பணி, வனவிலங்கு சார்ந்த எங்களது ஆர்வம் மற்றும் செல்லப்பிராணிகள் மீது நாங்கள் கொண்டுள்ள நேசம் குறித்து பேசினோம்.
இந்த வகையிலான உரையாடல் விலைமதிப்பற்றது. இந்த நாளை நினைத்துப் பார்த்தால் என் முகத்தில் புன்னகை பூக்கும்” என சச்சின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.