சென்னை: சர்வதேச இசை கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் மே 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் சென்னை ஐஐடி வளாகத்தில் மே 20 முதல் 26 ம் தேதி வரை ஒரு வார காலம் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. சென்னை ஐஐடி, ஸ்பிக் மேக்கேவ் என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பயிலரங்குகள், இசை, நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், யோகா, கைவினைக் கலைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இதன் தொடக்க விழா 20-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் 1300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை பொதுமக்களும் இலவசமாக கண்டுகளிக்கலாம். தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த தகவலை சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டீன் சத்ய நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.