போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்புர் மாவட்டத்தில் உள்ள பஹதுர்புர் கிராமத்தில் நாய் ஒன்றின் இறப்பு ஒட்டு மொத்த கிரமாத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘கலு’ என அழைக்கப்பட்ட அந்த நாய் அக்கிராமத்தில் உள்ள உமேலா குடும்பத்தினரால் எடுத்து வளர்க்கப்பட்டுள்ளது.கடந்த 10 வருடங்களாக கலு அந்தக் குடும்பத்தின் உறுப்பினராகவே கிராமத்தில் வளர்ந்துள்ளது.
நாயின் மரணம் குறித்து அதன் உரிமையாளர் கூறுகையில், “ஒட்டுமொத்த கிராமமும் கலு மீது பற்று கொண்டு இருந்தது. அதனால் அதன் இழப்பு அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. யாரவது ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தால் அவர்களின் இழப்பு அவ்வளவு வேதனையைத் தராது. ஆனால் திடீரென இறந்து விட்டால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. கலு நோய்வாய்பட்டிருக்கவில்லை. திடீரென என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.
பஹதுர்புர் கிராமாவாசியான அங்கிதா கூறுகையில், “கலு எங்களைவிட்டு போய்விட்டது. நாங்கள் மிகவும் மோசமாக உணர்கிறோம். அதனால்தான் நாங்கள் வீட்டில் இருக்க விரும்பவில்லை. அவன் (கலு) எங்கள் வீட்டுக்கும் வருவான். இதுவரை யாரையும் கடித்தது இல்லை. நாங்கள் எங்கள் குழந்தையைப் போல அவனைப் பார்த்தோம். அவனுக்கு பிஸ்கெட் ஊட்டுவோம்” என்றார்.
மற்றொரு கிராமவாசியான பத்மா பாய், "நாங்கள் பூசாரியை அழைத்து பூஜைகள் நடத்தினோம். நாங்கள் அவனுக்கு (நாய்க்கு) கலு என்று பெயர் வைத்திருந்தோம். அவனுக்கு பத்து வயது. இரவில் யாராவது வந்தால் அவன் அவர்களைப் பார்த்து குரைப்பான், இதுவரை எந்தக் குழந்தையையும் அவன் கடித்து இல்லை. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் எங்களை விட்டு போனதைப் போல நாங்கள் மிகவும் சோகமாக உணர்கிறோம்" என்றார்.
கிராமத்தினர் கலுவுக்கு முழு இறுதிச்சடங்குகள் செய்து உடலை தகனம் செய்தனர். மேலும் கலுவின் நினைவாக 13-வது நாளன்று கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயங்களையும் செய்தனர்.