திருப்பூர்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. சில மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசி வருகிறது. கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டத்திலும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது.
இந்த வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் அதிகளவு நீர், மோர் பருக வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் 19 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல், தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் அமைத்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில், வாவிபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் திறந்துவைத்தார். மேலும், நிதி உதவியும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் தலைவி திவ்யா மற்றும் திருநங்கைகள் பலர் பங்கேற்றனர். இந்த நீர் மோர் பந்தலை, வரும் 11-ம் தேதி வரை நடத்த உள்ளனர்.