சிவகங்கை: சிவகங்கை அருகே 287 ஆடுகள் பலியிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை அருகே திருமலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள திருமலை கண்மாய் மூலம் 175 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் விவசாயப் பணிகள் முடிவடைந்ததும், சித்திரை மாதம் விவசாயத்தை செழிக்க வைத்த மடைக் கருப்பு சாமிக்கு, கிராம மக்கள் படையல் திருவிழா நடத்துவது வழக்கம். பாரம்பரி யமாக நடைபெறும் இத்திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். அதன்படி, ஏப்.19-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.
ஆண்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் மாலை ஆடுகள், பாத்திரங்கள், அரிவாள், மணி, கோயில் காளைகளுடன் மடைக்கருப்பு சாமி கோயிலுக்கு ஊர்வலமாக சென் றனர். இதைத் தொடர்ந்து, மலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் முன்புள்ள சேங்காயில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து மண்பானையில் பொங்கலிட்டனர். பின்னர், 287 ஆடுகள் பலியிடப்பட்டன. ஆடுகளின் தலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பூசாரி சாமியாடி அருள்வாக்கு கூறினார். பச்சரிசி சாதம், பொங்கல், ஆட்டு இறைச்சி மடைக் கருப்புசாமிக்கு படைக்கப்பட்டன.
தொடர்ந்து, பகலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ஒரே நேரத்தில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. மீதமுள்ள ஆட்டு இறைச்சியை அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைத்தனர். தோல்களை தீயிட்டு எரித்தனர். தலைகள் மட்டும் ஒரு பிரி வினருக்கு வழங்கப்பட்டன.