வாழ்வியல்

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

செய்திப்பிரிவு

பெங்களூரு: நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்தச் சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் வேலை நேரத்தில் குறைந்தபட்ச இடைவேளை (பிரேக்) மற்றும் குடிக்க சுத்தமான குடிநீர் கூட கிடைக்காத காரணத்தால் சொந்த ஊருக்கு செல்லும் முடிவில் உள்ளார் கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வரும் ஷிவ் குமாரி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் மண், சிமென்ட், கல் போன்ற பொருட்களை சுமந்து கொண்டு செல்லும் உதவியாளர் (சித்தாள்) பணியை மேற்கொண்டு வருகிறார்.

“எங்களுக்கு வேலை கொடுக்கும் மேலாளர்கள் அறவே உணர்வற்றவர்களாக செயல்படுகிறார்கள். கடும் வெயில் காரணமாக எங்களால் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் குடிக்க குடிநீர் கூட இல்லை. கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்படும் நீரை நாங்கள் பருக வேண்டி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சில நாட்களில் அதுவும் இருக்காது. பல மணி நேரம் வேலை செய்கிறோம். ஓய்வு நேரம் என்று எதுவும் இல்லை.

எனது குழந்தைகளும் இந்த நேரத்தில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதனால் நான் எனது சொந்த கிராமத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன். எனது கணவர் இங்கு பணியை தொடர்வார். அவர் ஈட்டும் வருமானத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும்” என்கிறார் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஷிவ் குமாரி.

“தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நாங்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து எங்களுக்கான குடிநீரை கொண்டு வர வேண்டி உள்ளது. மெட்ரோ கட்டுமான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் பணி நிமித்தமாக செல்ல வேண்டி இருக்கும்.

மதிய நேரங்களில் கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்படும் உலோக பொருட்கள் மிகவும் சூடாக இருக்கும். அதனை கைகளால் தொட்டால் சுட்டுவிடும் அளவுக்கு இருக்கும். இந்தச் சூழலிலும் எங்களுக்கு ஓய்வு என்பதே வழங்கப்படுவதில்லை” என்கிறார் 35 வயதான ‘நம்ம மெட்ரோ’ கட்டுமான பணியாளர் ஒருவர்.

“இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவில் வருகின்றனர். அதனால் எந்த அரசு அமைப்பும் இவர்களுக்காக குரல் கொடுக்க இங்கு இல்லை. சில இடங்களில் பணியின் போது தொழிலாளர்கள் மயக்கமடைந்த நிகழ்வுகளும் உள்ளன. மாநிலம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.

இவர்களது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொழிலாளர் துறையை சேர்ந்த அலுவலர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என ஓராண்டுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இரண்டு மாதங்கள் மட்டுமே அந்த பணியை செய்த அரசு அலுவலர்கள், அதை அப்படியே மறந்து விட்டனர்” என கர்நாடக மாநில கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்பண்ணா வருந்துகிறார்.

தேர்தல் நேரத்தில் கூட இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முன்வராதது கவலை தருவதாக உள்ளது என சமூக ஆர்வலர் மஹந்தேஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெங்களூருவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், டேங்கர் லாரி நீரின் விலை ரூ.1500 வரை அதிகரித்துள்ளது. அதேபோல நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. | அதன் முழு விவரம்: பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: நீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்

SCROLL FOR NEXT