சென்னை: எப்போதும் போல நடப்பு ஐபிஎல் சீசனிலும் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் தங்களது அதீத ஆதரவை வழங்கி வருகின்றனர். அது சிஎஸ்கே அணி செல்லும் இடமெல்லாம் தொடர்கிறது. அந்த வகையில் அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர் தான் 82 வயதான ஜானகி பாட்டி. அவர் குறித்து பார்ப்போம்...
அண்மையில் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு ரசிகர்கள் சிலை வைக்க வேண்டும் என சொல்லி பதாகை ஒன்றை ஏந்தி வந்தனர். மற்றொருவர் தோனி ஓய்வை அறிவிக்க கூடாது என வீடியோ ஒன்றில் கறாராக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வரிசையில் இணைந்துள்ளார் ஜானகி பாட்டி. அவரது இன்ஸ்டாகிராம் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதில் தோனியின் மீது தான் கொண்டுள்ள ஈர்ப்பு குறித்து அவர் விவரித்துள்ளார்.
‘அன்புள்ள தோனிக்கு. நான் உங்களது ரசிகை. எனக்கு 82 வயதாகிறது. நான் எனது நடுத்தர வயதில் மிகவும் பிஸியாக பணியாற்றி வந்தேன். பிள்ளைகள், குடும்பம், வீட்டு வேலை என நாட்கள் கடந்தது. அப்போது நான் சோர்வாகவும் உணர்ந்தது உண்டு. அதே நேரத்தில் நான் சச்சினின் ஆட்டத்தை கண்டு ரசிக்க துவங்கினேன். அவரை நேரில் சந்தித்து விட வேண்டும் என்பது எனது கனவு. அவரது ஆட்டம் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் தோனியின் வருகை எனக்கு அதே ஆனந்தத்தை கொடுத்தது. தோனியின் கள செயல்பாடுகள் என்னை ஈர்த்தன. அவரது ஆட்டத்தை பார்க்கும் போது நான் அப்படியே பிரமித்து நிற்பேன்.
இந்த சூழலில் தான் தோனியின் ஆட்டத்தை நாம் நேரில் பார்த்து ரசிக்க போகிறோம் என எனது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதை கேட்டு எனக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனது வயது தொடங்கி அனைத்தையும் அது அப்படியே மறக்க செய்தது. நிகழ் நேரத்தில் உங்களது பணியை களத்தில் நேரடியாக பார்ப்பது ஒரு மேஜிக். இந்த நினைவுகள் என்றென்றும் எனக்குள் நினைவில் இருக்கும்” என ஜானகி பாட்டி தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை சுமார் 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.