புதுடெல்லி: கிரண் வர்மா டெல்லியைச் சேர்ந்தசமூக சேவகர். ரத்த தானத்துக்கு என்று ‘சிம்ப்ளி பிளட்’ என்றொரு அமைப்பையும் நடத்தி வருகிறார். இவரது சமூக வலைதள பகிர்வுஒன்று வைரலாகியுள்ளது.
அதில் அவர், “ஊபர் வாடகைகார் பதிவு செய்திருந்தேன். காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு போன் வந்தது. அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து இரு முறை அழைப்பு வந்ததால், எடுத்துப் பேசுங்கள் என்றேன். அதைத் தொடர்ந்து அவர் போனில் பேசினார்.
எதிர்முனையில் அவரது மகள் பேசினாள். பள்ளி செல்லும் குழந்தை. அவள் பேசியது எனக்கும்சற்றுக் கேட்டது. தனக்கு ஸ்கூல் பேக் வேண்டும் என்று கேட்டாள். ஓட்டுநர் தன் மகளிடம் சமாளித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் தன் மனைவியிடம் பேசினார். ‘கணிசமான தொகை இப்போதுதான் பிள்ளைக்கு புத்தகம் வாங்க செலவானது. இந்த மாதத்துக்கான செலவுகளையும் சமாளிக்க வேண்டும். இதனால், இப்போது பேக் வாங்க போதிய பணம் இல்லை. ஒவ்வொரு நாளும் பணத்தை சேமிக்க முயற்சிக்கிறேன்’ என்றார்.
இதைக் கேட்டதும் நான் அருகில் இருந்த கடையில் காரை நிறுத்தச் சொன்னேன். அங்கிருந்து ஸ்கூல் பேக் ஒன்று வாங்கினேன். அதை அவரது மகளிடம்கொடுக்கச் செல்லி ஓட்டுநரிடம் கொடுத்தேன். என் வங்கிக் கணக்கில் அப்போது பணம் இல்லாததால், என் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்தினேன். ஓட்டுநர் மகிழ்ந்து போனார்.
வீட்டுக்குச் சென்றதும், தன் மகள் அந்தப் பேக்கை வைத்திருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். விலைமதிப்பற்ற புகைப்படம். அது எனக்கு மிகப் பெரும்நிறைவைத் தந்தது” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு மிகுந்த நெகிழ்ச்சியைத் தருவதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.