புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் 7 வயது மகளுக்கு ஃபான்கோனி அனீமியா என்ற நோய் ஏற்பட்டது. இதை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அவசியம். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.33 லட்சம் செலவாகும் என கூறப்பட்டது.
முதலாம் தலைமுறை வழக்கறிஞரால் தனது மகள் சிகிச்சைக்கு ரூ.13 லட்சம் மட்டுமே திரட்ட முடிந்தது. இதனால் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உதவியை நாடினார். சங்கத்தில் உள்ள மூத்த வழக்கறிஞர்களின் பங்களிப்பில் ரூ.5 லட்சம் திரட்டப்பட்டது. இன்னும் ரூ.15 லட்சம் தேவைப்பட்டது.
இதையடுத்து வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலாளர் மீனேஷ் துபே, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயின் உதவியை நாடினார். இதையடுத்து தானே ரூ.15 லட்சத்தை தருவதாக கூறிய ஹரீஷ் சால்வே, மறுநாள் அந்த பணத்தை கொடுத்தார். இதனால் சிறுமியின் சிகிச்சை தாமதமின்றி தொடங்கியது. வழக்கறிஞர்களின் தாராள நிதியுதவி, 7 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி வழக்கறிஞர் குடும்பத்துக்கு நிம்மதி அளித்துள்ளது.