‘யார் கதை?’ நாடகத்தின் ஒரு காட்சி. 
வாழ்வியல்

கோவையில் உருவாகும் நவீன நாடக வெளி!

Guest Author

கோவை: உலக நாடக நாளை ஒட்டி பழைய மாருதி திரையரங்கச் சமுதாயக் கூடத்தில் நவீன நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. பொதுவாக நவீன நாடகம் சென்னையை மையமாகக் கொண்டே பெரும்பாலும் நிகழ்த்தப்படும். சென்னையில் நவீன நாடகக் குழுக்கள் அதிகம் இயங்குவதும் நவீன நாடகம் நிகழ்த்துவதற்கான அரங்கு வசதிகள் அதிகம் உள்ளதும் இதற்கான காரணங்கள் எனலாம்.

அதற்கு மாற்றாக கோவையில் இப்போது மாருதி திரையரங்கச் சமுதாயக் கூடம் மூலம் நவீன நாடகத்துக்கான அரங்கு வசதி திறக்கப்பட்டுள்ளது. மார்ச் 27, உலக நாடக நாளை ஒட்டி அங்கு நிகழ்த்தப்பட்ட மாற்றுக் களம் அமைப்பின் நவீன நாடகமான ‘யார் கதை’ அதற்குச் சிறந்த முன்னு தாரணம். முனைவர் திலீப்குமார் இயக்கிய நாடகம் இது. சமகாலப் பிரச்சினைகளை உதாரணமான கதாபாத்திரங்கள் கொண்டு இந்த நாடகத்தில் திலீப் குமார் கையாண்டிருந்தார்.

செயற்கை விளக்குகள் அதிகம் இல்லாமல், ஒலிப் பெருக்கி இல்லாமல், பாதல் சர்க்கார் போன்ற நவீன நாடக மேதைகள் முன்மொழிந்த எளிய நவீன வடிவத்துடன் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை அளித்தது. தன் மகன் மீது தனது விருப்பங்களைத் திணிக்கும் ஒரு தந்தை வழி இன்றைய காலப் பெற்றோரை நாடகம் விமர்சன பூர்வமாக அணுகியிருந்தது. இதனால் குழந்தைகளின் விருப்பமும் நிறைவேறாமல் பெற்றோரின் விருப்பமும் நிறைவேறாமல் குழந்தைகள் வீணாவதை வருத்தத்துடன் பதிவி செய்தது நாடகம்.

நாடகத்தைக் கண்டு களித்த பார்வையாளர்கள். படங்கள் : ஜெ. மனோகரன்

ஒரு பாட்டி கதாபாத்திரம் மூலம் இன்றைக்குச் சமூகத்தில் நிலவுகிற சாதியின் கொடூரத்தையும் நாடகம் சித்தரித்தது. ஆணவக் கொலையையும் நாடகம் கவனப்படுத்தியிருந்தது. புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சிறுமியின் படுகொலைச் சம்பவமும் இந்த நாடகத்தில் சித்தரிக்கப்பட்டது. இந்த சமூகப் பிரச்சினைகளையெல்லாம் தங்கள் திடம் மிக்க உடல் மொழியால் நடிகர்கள் வெளிப்படுத்திப் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். அரங்கு நிறைந்த பார்வையாளர்களை இந்த நவீன நாடகம் சுவாரசியத்தையும் சிந்தனையையும் அளித்தது. இந்த நாடகத்தின் வெற்றி, கோவையில் இம்மாதிரி நவீன நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதற்கான நம்பிக்கையை அளிக்கும் எனலாம்.

SCROLL FOR NEXT