சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் புது மண்டபத்தின்  உட்பகுதி. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
வாழ்வியல்

மதுரையில் 3 ஆண்டாக மூடிக்கிடக்கும் புது மண்டபம் - சித்திரை திருவிழாவுக்குள் திறக்கப்படுமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையின் பழங்கால வரலாற்றுப் பெருமைகளில் மீனாட்சி அம்மன் கோயிலின் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள புது மண்டபம் முக்கியமானது. இம்மண்டபம் 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்டது. இங்குள்ள 125 தூண்களும், 28 வகையான சிற்பங்களும் வெளிநாட்டு சுற் றுலாப் பயணிகளையும் ஆச்சரி யப்பட வைக்கின்றன.

மீனாட்சியம்மன் கோயில் நிர்வா கத்தால் கடைகள் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த புது மண்டபத்திலிருந்து நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த கடைகள் குன்னத் தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்து மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறக்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால் கடைகள் காலி செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை புது மண்டபம் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட வில்லை. உற்சவ விழாக்களுக்காக மட்டும் அவ்வப் போது திறக்கப் படுகிறது. மீண்டும் இந்த புதுமண்டபம் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படுமா? அல்லது மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புது மண்டபத்தில் உள்ள கடை களால் கலைநயமிக்க சிற்பங்கள் சேதமடைவதாகவும், அதனை சுற்றுலாப் பயணிகள் முழுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லை என்றும் கூறியே வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் தற்போது வரை புது மண்டபம் திறக்கப் படாதது பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக மூடிக்கிடக்கும் புது மண்டபம் முன் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘‘சித்திரைத் திருவிழாவுக்குள் புதுமண்டபத்தை திறந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை. அங்கு கடைகள் செயல்பட்ட காலத்திலாவது, மக்கள் சாதாரணமாக அங்கு சென்று புது மண்டபத்தையும், அதன் கட்டிடக்கலையும் சுற்றிப் பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது மண்டபத்தை மீட்பதாகக் கூறி மொத்தமாக மூடி விட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக இப்படி வரலாற்று சிறப்பு மிக்க சிற்பக் கூடத்தை பூட்டி வைத்திருப்பதால், அடுத்த தலைமுறையினருக்கு புது மண்டபம் பற்றிய வரலாறும், பெருமைகளும் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் செயல்படாமல் முடக்குவதே அதனை அழிப்பதற்கான முதல் முயற்சியாக கருதப்படுகிறது. உள்ளூர் மக்கள் பிரநிதிகள், மூடிக்கிடக்கும் புது மண்டபத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஆண்டுக் கணக்கில் புது மண்டபம் மூடிக் கிடப்பதால் தற்போது அதனைச் சுற்றிலும் சிறு சிறு கடைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பு பணிகளை துரிதமாக முடித்து, வரும் சித்திரைத் திருவிழாவுக்குள் புது மண்டபத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT