அகமதாபாத்: குஜராத்தை சேர்ந்த 3 அடி உயரம் கொண்ட கணேஷ் பாரையா என்ற இளைஞர் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். அதாவது, உயரத்தைக் காரணம் காட்டி எம்.பி.பி.எஸ் படிக்க அனுமதிக்காத இந்திய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றது பல்வேறு மக்களையும் நெகிழச் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ் பாரையா (வயது 23). இவர் 3 அடி உயரம் கொண்டவர். இவரின் உடலில் லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. பள்ளியிலும் பல்வேறு கேலிகளுக்கும், கிண்டல்களுக்கு ஆளாகிதான் படித்து வந்திருக்கிறார். சிறுவயதிலேயே மருத்துவர் ஆக வேண்டும் என்றக் கனவு இருந்திருக்கிறது. பின்னர் நீட் தேர்வை எழுதி, அதிலும் வென்று காட்டினார். ஆனால் இவருடைய உயரத்தை காரணமாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் எம்பிபிஎஸ் படிக்கத் தகுதியற்றவர் என கூறியது.
இதை எதிர்த்து கணேஷ் பாரையா குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து கணேஷ் பாரையா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அங்கு அவர் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து 2019-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார். பல இடையூறுகளுக்கு மத்தியில், நல்லபடியாக படித்து முடித்துவிட்டார். தற்போது, பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தற்போது பாரையா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கணேஷ் பாரையா கூறும்போது, “நான் பிளஸ் 2 படித்த கையோடு, நீட் தேர்விலும் வெற்றியடைந்தேன். ஆனால் எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்த போது, இந்திய மருத்துவ கவுன்சிலில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உயரம் குறைவாக இருப்பது காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து நான் மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து பேசினேன். அவர்தான் என்னை பாவ்நகர் ஆட்சியரையும், குஜராத் கல்வி அமைச்சரையும் சந்திக்குமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து அவருடைய ஆலோசனையின் பேரில் நான் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அங்கு எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம். அதில் வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். மருத்துவமனையில் என்னை முதலில் பார்க்கும் நோயாளிகள் குழப்பமடைவார்கள். பின்னர் எனது சிகிச்சையை பார்த்து எனக்கு தக்க மரியாதை கொடுக்கத் தொடங்கினார்கள்” என்றார்.
மூன்றடி உயரமுள்ள கணேஷ் பாரையா, மருத்துவராக வேண்டும் என்ற கனவை அடைய அவரது உயரம் ஒரு முட்டுக்கட்டையாக இல்லை. திறமைக்கு வயது, உயரம், எடை என எதுவும் முக்கியம் இல்லை என்பதை போராடி வென்று காட்டியுள்ளார்.