வாழ்வியல்

திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டு சோழர் காலத்து அழகிய கற்சிற்பம் கண்டெடுப்பு

ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கற்சிற்பம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், ஆய்வு மாணவி உமா உள்ளிட்டோர் திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, 700 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்காலச் சோழர்கள் கலைப்பாணியில் அமைந்த அழகிய கற்சிற்பம் மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுத்தனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் முனைவர் ஆ.பிரபு கூறியது: ''திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறியப்படாத பல வரலாற்றுத் தடயங்களை எங்கள் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பிரசித்திபெற்ற பசலிக்குட்டை முருகன் கோயில் பகுதியில் எங்கள் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட களஆய்வில் சோழர் காலத்து கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

2021ல் கண்டெடுக்கப்பட்ட தலை வெட்டப்பட்டு கைகள் சிதைக்கட்டுப் பல துண்டுகளாக வீசப்பட்ட பழையான விஷ்ணு சிற்பம்

பசலிக்குட்டையில் உள்ள ஏரியின் தென்கிழக்குக் கரையில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் புதர்மண்டிக்கிடந்த இடத்தில் இந்த கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கருமை நிறக் கல்லால் மிக நேர்த்தியாக இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது கருடனின் தோளில் அமர்ந்த நிலையில், நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு நின்ற நிலையில் லட்சுமி தேவியும் வடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் உயிரோட்டமாக வடிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஐந்தரை அடி உயரமுள்ளதான இந்த சிற்பம் 3அடி மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சிற்பத்தில் விஷ்ணு மற்றும் லட்சுமிதேவியின் முகங்கள், கரங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிற்பத்தை இந்த பகுதி மக்கள் ''காளியம்மன்'' என்று அழைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த சிற்பம் பிற்காலச்சோழர்களின் கலைப்பாணியில் அமைந்துள்ளதால் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். மேலும் கருடன் மீது அமர்ந்த நிலையில் உள்ள விஷ்ணு தேவி கற்சிற்பம் அரிதான ஒன்றாகும். அரிய இக்கலைப்படைப்பு மண்ணில் புதையுண்டு இங்கிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

இதுபோன்ற கற்சிற்பங்கள் பழைமையான வைணவக் கோயில்களில்தான் பெரும்பாலும் காணப்படும். அப்படியிருக்க இங்கு மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதற்கான காரணம், சமயப்பூசல் ஆகும். ஒரு காலத்தில் தமிழகத்தில் நிலவிய சமயப்பூசல் காரணமாக பல சமயங்களின் சிற்பங்கள், கோயில்கள் அழிக்கப்பட்டன. சைவம், வைணவம், பெளத்தம், சமணம், இஸ்லாம் போன்றவைகளுக்கு இடையிலான பூசல்களில் அரிய கலைப்படைப்புகள் சிதைக்கப்பட்டது வரலாறு.

பசிலிகுட்டை பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பம்.

அந்தத் தருணத்தில் எஞ்சியிருந்த சிலைகளை மண்ணிலும் நிலவரைகளிலும் புதைத்துப் பாதுகாத்தவைகள் காலங்கடந்து கண்டறியப்பட்டுள்ளன. அதுபோல பசலிக்குட்டையில் உள்ள இந்த சிற்பம் சமயப்பூசலில் சிக்கி சிதைக்கப்பட்டுப் பின்னர் மீட்டு நிலத்தில் புதைத்து மறைக்கப்படிருக்கலாம். இதற்குச் சான்றாகத் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகிலுள்ள விநாயகபுரம் என்ற இடத்தில் தலை வெட்டப்பட்டு கைகள் சிதைக்கட்டுப் பல துண்டுகளாக வீசப்பட்ட பழையான விஷ்ணு சிற்பத்தினை கடந்த 2021ல் கண்டறிந்து மீட்டு அந்த இடத்திலேயே வைத்துள்ளோம்.

பல வரலாற்று நிகழ்வுகளையும், கலை நேர்த்தியையும் தம்மில் வைத்துக்கொண்டு புதையுண்ட இதுபோன்ற வரலாற்றுத் தடயங்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு ஆவணப்படுத்த முன்வர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என்றார்.

SCROLL FOR NEXT