வாழ்வியல்

மதுரை அருகே ‘கம கம’ பிரியாணி திருவிழா: பல்லாயிரம் பேருக்கு முனியாண்டி விலாஸ் விருந்து

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை: மதுரை அருகே பல்வேறு மாநில முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து முனியாண்டி சுவாமி கோயிலில் பிரம்மாண்ட பிரியாணி திருவிழாவை நடத்தி பல்லாயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கினர்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இங்குள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஹோட்டல் உரிமையாளர்களால் பிரியாணி திருவிழா நடத்தப் படுகிறது. கடந்த தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை நாயுடு சமூகத்தினர் இவ்விழாவை நடத் தினர். நேற்று முன்தினம் ரெட்டி சமூகத்தினர் விழாவை நடத்தினர். இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

மாலையில் ஏராளமான பெண்கள் மாலை தட்டுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். கோயில் வளாகத்தில் நடந்த அன்ன தானத்தில் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் முனி யாண்டிக்கு ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக வழங்கினர். இப்படிச் சேர்ந்த 200 ஆடுகள், 300 கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டன. 2,500 கிலோ அரிசியைப் பயன்படுத்தி சமை யல் கலைஞர்கள் மூலம் பல அண்டாக்களில் பிரியாணி தயாரிக் கப்பட்டது.

நேற்று அதிகாலை முனியாண்டி சுவாமிக்கு பிரி யாணி படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். பின்னர் பிரியாணி பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப் பட்டது. வடக்கம் பட்டியைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிரியாணியைப் பெற்றுச் சென்றனர். நன்கொடையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிறப்புப் பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன், சென்னை மண்டல ரெட்டி நலச்சங்க தலைவர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று இளைஞர ணியினர் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது. திருவிழா குறித்து விழாக் குழுவினர் கூறியது: முனியாண்டி சுவாமி பெயரில் ஹோட்டல் நடத்துவோர் தினசரி ஒரு தொகையை காணிக்கையாகச் சேர்த்து கோயிலுக்கு நன்கொடை வழங்குகின்றனர்.

மக்களின் நன்கொடையில் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன், பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்விழா நடத்தப் படுகிறது. இதற்காக ஹோட்டல்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து விழாவில் பங்கேற்போம் என்று கூறினர்.

SCROLL FOR NEXT