திருப்பத்தூர்: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர் என சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில், உழவர்கள், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பாரம்பரிய விதைகள் மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில் தலைமை வகித்தார். ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் தலைமை சித்த மருத்துவர் விக்ரம் குமார் முன்னிலை வகித்தார்.
சித்த மருத்துவ மாநில திட்டக்குழு உறுப்பினர் மருத்துவர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது,‘‘இந்தியாவில் கடந்த சில காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சதவிகிதம் அதிகரித்து வருகிறது.
இதனால் மத்திய மனநலம் சார்ந்த இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் 47 அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 6 மாதங்களில் மட்டும் 22 ஆயிரத்து 500 பேர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இளைஞர்களின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என ஆய்வு செய்ததில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த 750 பேரின் மரணம் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, உயிரிழந்தவர்களில் 13 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகளாகவும், 15 சதவீதம் பேர் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் 40 வயதுக்குள் உயிரிழிந்தவர்களாகவும், 17 சதவீதம் பேர் அதிக அளவில் மது அருந்துபவர்களாகவும், 10 சதவீதம் பேர் திடீரென அதிகமான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களாகவும், 10 சதவீதம் பேர் கரோனா காலத்தில் அதிக அளவில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிருடன் மீண்டு வந்தவர்கள், திடீரென மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அந்த ஆய்வில் தெரியவந்தது.
எனவே, ஒரு குடும்பத்தில் இளம் வயது மரணங்கள் இருந்தால், நாம் கூடுதலாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது, உடலில் பல்வேறு பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது சர்க்கரை நோய் தான்.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளனர்.
இது பெரும் கவலையை அளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விளைந்த காய்களில் இருந்த சத்துக்களில் தற்போதுள்ள காய்களுடன் ஒப்பிட்டால் 20 சதவீதம் சத்துக்கள் குறைந்துவிட்டன. எனவே, ஒவ்வொரு வேலையும் சத்தான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஒருவருக்கு 40 வயதில் சர்க்கரை வியாதி வந்தால், முதல் 10 வருடத்தில் எந்த பாதிப்பும் தெரியாது. 50 வயதை கடந்தால் உடலில் சில மாற்றங்கள் தெரியும்.உடல் சோர்வு, எடை குறைவு, சின்ன, சின்ன வியாதிகள் வந்தால் குணமாகாது. 60 வயதை கடந்தால் சர்க்கரை நோயால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
மாரடைப்பு, புற்றுநோய் கூட வரலாம். புற்றுநோய்க்கும் சர்க்கரை வியாதிக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.