சாமுண்டா கிடா 
வாழ்வியல்

சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர்களின் நண்பனான கிடா

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் முகாமிட்டிருக்கும் சிஆர்பிஎப் வீரர்களின் நெருங்கிய நண்பனாக ஒரு கிடா அவர்களோடு பயணித்து வருகிறது.

சிஆர்பிஎப் படையின் 150-வது பட்டாலியன் வீரர்கள் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். கடந்த2014-ம் ஆண்டு இந்த படை வீரர்கள்சுக்மா மாவட்டத்தின் கன்னர்லங்கா கிராமத்தில் முகாமிட்டிருந்தனர். அப்போது ஒரு முட்புதரில் 45 நாட்களான ஆட்டுக்குட்டி நோயால் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்தது. அந்த ஆட்டுக் குட்டியை சிஆர்பிஎப் வீரர்கள் மீட்டு முகாமுக்கு கொண்டு வந்தனர்.

கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி ஆட்டுக்குட்டிக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அது உடல்நலம் தேறி துள்ளிக் குதித்து விளையாடத் தொடங்கியது. ஆஜ்மீரின் சாமுண்டா தேவி நினைவாக ஆட்டுக்குட்டிக்கு சாமுண்டா என்று வீரர்கள் பெயரிட்டனர்.

6 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் ஆட்டுக் குட்டி வளர்ந்து கிடாவாக மாறியது. ஆனாலும் அந்த கிடா, சிஆர்பிஎப் வீரர்களை விட்டு விலகாமல் அவர்களோடு பயணம் செய்தது.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாட சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதி முழுவதும் சிஆர்பிஎப்வீரர்கள் சுற்றித் திரிகின்றனர். அவர்களோடு சேர்ந்து சாமுண்டாவும் ஒவ்வொரு கிராமமாக சுற்றுகிறது.

இதுகுறித்து சிஆர்எப் வீரர்கள் கூறியதாவது: நாங்கள் முகாம் அமைக்கும் இடங்களில் ஒவ்வொரு கூடாரமாக சாமுண்டா செல்லும். ஒவ்வொரு வீரரும் அதற்கு தேவையான உணவு வகைகளை வழங்குவர். கடந்த 10 ஆண்டுகளாக எங்களோடு இருக்கும் சாமுண்டா எங்களது நெருங்கிய நண்பனாக மாறிவிட்டது.

அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ராய்ப்பூரில் இருந்து மருந்துகளை வரவழைத்து வழங்குவோம். எங்களைப் போன்றே சாமுண்டாவும் ஒழுக்க நெறிகளை கண்டிப்புடன் பின்பற்றுகிறது. நாங்கள் தண்ணீர், உணவு வழங்கினால் மட்டுமே சாப்பிடும். எந்த சூழ்நிலையிலும் யாரையும் முட்டாது.வீரர்களோடு கொஞ்சி விளையாடும். வாழ்வா, சாவா என்ற நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் எங்களுக்கு சாமுண்டா மனஆறுதல் அளிக்கும் நண்பனாக இருக்கிறது. இவ்வாறு சிஆர்பிஎப் வீரர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT