வாழ்வியல்

“இறைவனின் தூதர்கள் போலவே மருத்துவர்கள் உயிர் காக்கின்றனர்” - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: “இறைவனின் தூதர்களைப் போல் மருத்துவர்கள் மனிதர்களின் உயிர்காக்கின்றனர்” என இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மதுரைக்கிளை சார்பில் இன்று நடந்த பொங்கல் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

மதுரையில் இன்று இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மதுரைக்கிளை சார்பில் பொங்கல் விழா கருப்பாயூரணி குரு பூங்காவில் நடைபெற்றது. இதற்கு மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஏ.ரத்தினவேல் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.மீனாட்சிசுந்தரம், செயலாளர் எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ்.சதீஷ்குமார் வரவேற்றார்.

டாக்டர் எஸ்.ஜி.பாலமுருகன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இவ்விழாவில், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: “சமய இலக்கியங்களில் மருத்துவத்தை பற்றி நிறைய வருகின்றன. இறைவனையே நாம் மருந்தீஸ்வரர் என்றுதான் சொல்வோம். திருவான்மியூரிலுள்ள இறைவனுக்குப்பெயர் மருந்தீஸ்வரர். சீர்காழியில் இருக்கும் இறைவனுக்குப்பெயர் வைத்தியநாதன். இவர் நோய் நீக்குபவர். கண்ணப்பர் என்பவர் எம்பிபிஎஸ் படிக்கவில்லை, ஆனால் அறுவை சிகிச்சை செய்துவிட்டார். அவருக்கு யார் நோயாளியாக இறைவன் சிவபெருமானே கிடைத்தார்.

கண்மாற்று அறுவை சிகிச்சையை முதலில் செய்தவர் திண்ணனார் என்ற கண்ணப்பர். அவரிடம் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் சிவபெருமான். வாழ்க்கை என்பது சமயத்தோடு மட்டும் இணைந்து வருவதல்ல. இயல்பான நடைமுறையோடு இணைந்து வருவதுதான் வாழ்க்கை. இன்று படித்து வழக்கறிஞர், பொறியாளர், மருத்துவர் என ஆகிறோம். ஆனால் முதலில் நாம் மனிதர்கள் ஆகிறோமா என்பதுதான் கேள்வி. திருவள்ளுவர்தான் பெண்ணுக்கு வாழ்க்கைத்துணை நலம் என்ற தலைப்பை வழங்கினார்.

இன்று உயர்ந்த பொறுப்பில் இருக்கிறவர்களுக்கு நாம் கொடுக்கும் மாண்புமிகு பட்டத்தை முதல் முதலில் பெண்ணுக்கு (மனைவிக்கு) தந்தவர் திருவள்ளுவர். ‘மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை’ என்று குறளில் சொல்லியுள்ளார். அத்தகைய மாண்பு பெண்களுக்கு உண்டு.

தமிழுக்கு தலைநகரம் மாமதுரைதான். மூன்று தமிழ்ச்சங்கம் கண்டது. நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்தார். ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக எங்களது உலகத்தமிழ் திருக்குறள் பேரவை இயங்கி கொண்டிருக்கிறது. இவையெல்லாம் தமிழை வளர்ப்பதற்காக மட்டுமல்ல. மதுரைக்கு எப்போதும் மண்ணோடு கலந்த மரபு. பேசிவிட்டு போவதல்ல வாழ்க்கை, பேசிய பாதையில் மனித சமூகத்தை வழிநடத்துவதுதான் வாழ்க்கை. இறைவனின் தூதர்களைப்போல் மருத்துவர்கள் மனிதர்களின் உயிர்காக்கின்றனர்” என்று பேசினார்.

SCROLL FOR NEXT