கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே கங்கமடுகு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசைக் கலைஞனின் நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் மணவாரணப் பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கமடுகு கிராமத்தில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி வரலாற்று துறை இணைப் பேராசிரியர் வெங்கடேஸ்வரன், முதுகலை மாணவர் அசோக்குமார் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வமணி ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசை கலைஞனின் நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியது: "கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வேப்பனப் பள்ளி மற்றும் பேரிகை சுற்று வட்டாரப் பகுதிகளில், தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள தொன்மையான இடங்கள், நடு கற்கள், கல்வெட்டுகள், கோவில்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவமான இடங்களையும், பொருட்களையும் ஆவணப் படுத்தி சேகரித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக வேப்பனப் பள்ளி ஒன்றியம் மணவாரணப் பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கமடுகு கிராமத்தில், திம்ம ராஜ் என்பவர் வீட்டின் அருகில் உள்ள ராமேகவுடு மற்றும் லட்சுமேகவுடு என்ற பெயரில் வழிபாட்டில் உள்ள 13 நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்த நடுகற்கள் பல்வேறு கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும்.
இதில், 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசை கலைஞனின் நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் சிற்பமாக உள்ள இசைக் கலைஞன், கொம்பு இசைக் கருவியை தன்னுடைய வலது கையால் நடுப்பகுதியை மேல் நோக்கிப் பிடித்தபடியும், அதற்கு ஏற்றார் போல் இசைக் கலைஞன் தன் உடலை பின்பக்கமாக சாய்த்தும், தலையை சற்றே மேல் நோக்கியும் இடது கையால் கொம்பு இசைக் கருவியை பிடித்து வாயின் நுனிப் பகுதியில் வைத்து, கன்னம் விம்மி புடைக்க காற்றை ஊதி இசைக் கருவியில் இருந்து இசையை ஒலிப்பது போல் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. இசைக் கலைஞனின் தலைமேல் அணிந்துள்ள தலைப்பாகை பின்பக்கமாக சாய்ந்தவாறு உள்ளது. உடல் அமைப்பு பலசாலியை போல் உள்ளது.
இடுப்பு பகுதி சிறுத்தும், இடையில் கச்சையும் கட்டப்பட்டுள்ளது. கச்சையானது இரு கால்களுக்கும் இடையில் தொங்கியவாறு உள்ளது. இசைக் கலைஞன் கால்சட்டை அணிந்துள்ளது போல் சிற்பம் உள்ளது. இடுப்பில் பின்புறம் நீளமான கனத்த கைப்பிடியுடன் கூடிய வாள் ஒன்றும் தொங்கிக் கொண்டுள்ளது. இசைக் கலைஞனின் அருகில் அவனது மனைவி சேலை கட்டிய சிற்பமாக உள்ளது. தன்னுடைய வலது பக்க கையை இடுப்பில் வைத்தவாறு இடதுகையில் மதுக் குடுவையை பிடித்துள்ளாார். இரு கைகளிலும் வளையல்கள் அணிந்து, தலையில் கொண்டையானது இடது பக்கமாக உள்ளது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த இசைக் கலைஞன் அப்பகுதியில் கொம்பு இசை இசைப்பதில் வல்லவனாகவும், தனி சிறப்பு பெற்று விளங்கி இருக்கக் கூடும். அல்லது அவர் நீண்ட வாள் வைத்திருக்கும் தோற்றத்தைப் பார்த்தால், அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னனின் படைப் பிரிவில் சிறப் புற்று விளங்கிய ஒரு கொம்பு இசை கலைஞனாகவும் இருந்திருக்க கூடும். இந்த இசை கலைஞன் போரிலோ, இயற்கையாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ இறந்திருக்கலாம். அவருடைய வீரத்தையும் கலை திறமையையும் ஊர்போற்றும் வகையில் அவர் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள அவரது மனைவி தன் கணவன் இறந்தவுடன் அவரும் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம்.
எனவே இருவரையும் ஒரே கல்லில் சிற்பமாக வடித்துள்ளனர். 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் கலாச்சார பெருமை மிக்க இசையாக விளங்கிய இந்த கொம்பு இசை, தற்போது நாகரிகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, அதனை கற்றுக்கொள்ள இளைய தலைமுறையினர் முன் வராத காரணத்தினால், கொம்பு இசை தன் இசையை மெல்ல மெல்ல மூச்சடக்கிக் கொண்டது” என்று அவர் கூறினார்.