வாழ்வியல்

சிறுமலை கிராமங்களில் குதிரை பொங்கல் வழிபாடு!

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது போல், சிறுமலை கிராமப் பகுதிகளில் குதிரைக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

விவசாயப் பணிகளுக்கு உதவிடும் மாடுகளுக்கு நன்றி கூறும் விதமாக ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தின் பல கிராமப் பகுதிகளில் மாடுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து பொங்கல் வைத்து விவசாயிகள், கால் நடை வளர்ப்போர் வழிபட்டனர். திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் உள்ள பழையூர், புதூர், வேளாண் பண்ணை, தாளக்கடை, கடமான் குளம், அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சாலை வசதி இல்லை.

அதனால் மிளகு, வாழை, சவ்சவ், மா உள்ளிட்ட விளை பொருட்களையும், வேளாண் இடு பொருட்களையும் கொண்டு செல்ல குதிரைகள் பயன் படுத்தப்படுகின்றன. இதற்காக விவசாயிகள் பலர் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் மாட்டுப் பொங்கல் தினத்தில், சிறுமலையில் குதிரைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குதிரைப் பொங்கல் கொண்டாடு கின்றனர். நேற்று குதிரைகளை குளிப்பாட்டி அவற்றுக்கு வண்ணங்கள் தீட்டி அலங்கரித்தனர்.

கழுத்து, காலில் சலங்கைகள் கட்டி மாலை அணிவித்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். குதிரைகளுக்கு ஓய்வளிக்கும் வகையில், அவற்றை அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக மேயவிட்டனர்.

SCROLL FOR NEXT