சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டிப் பட்டியில் 200 ஆண்டுகள் கடந்தும் மத ஒற்றுமையை போற்றும் புனித அந்தோணியார் ஆலயப் பொங்கல் விழா ஜன.18-ம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் மஞ்சு விரட்டு நடக்கிறது.
சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு 200 ஆண்டு களுக்கும் மேலாக பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அன்று கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்துக்களும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். இதனால் இத்திருவிழா மத ஒற்றுமையைப் போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் கரும்புத் தொட்டில் கட்டுவது, மெழுகு வர்த்தி ஏற்றுவது ஆகிய நேர்த்திக் கடன்களை செலுத்துவர். அன்று இரவு சப்பர பவனி நடைபெறும். மறுநாள் மஞ்சு விரட்டு நடைபெறும்.
இதையொட்டி அந்தோணியார் கோயிலில் இருந்து கிராம முக்கியப் பிரமுகர்கள் ஊர்வலமாக மஞ்சு விரட்டு திடலுக்கு வருவர். அங்கு காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்வர். தொடர்ந்து கோயில் காளை அவிழ்க்கப்பட்டதும், மற்ற மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும். மேலும் அதே பகுதியில் ஆங்காங்கே கட்டு மாடுகளும் அவிழ்த்து விடப்படும். இந்த மஞ்சு விரட்டில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்கும்.
இதைக் காண சிவகங்கை மட்டுமின்றி ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வருவர். அவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக வடை, பாயசத்துடன் கிராம மக்கள் விருந்து வழங்குவர். இதற்காக அவர்கள் வீதிகளில் நின்று கொண்டு, வெளியூர்களில் இருந்து வந்தவர்களைக் கை கூப்பி விருந்துக்கு அழைத்துச் சென்று உபசரிப்பர். இந்தாண்டு ஜன.10-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஜன.18-ம் தேதி பொங்கல் வைபவம், சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. ஜன.19-ம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ‘‘ எங்கள் ஊர் காவல் தெய்வமாக அந்தோணியார் உள்ளார். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், முதலில் அந்தோணியார் ஆலயத்தில் தான் வழிபாடு செய்வர். மேலும் எங்கள் கிராமத்தில் விருந்தோம்பலை முக்கியமாகக் கருதுவோம். இதனால் நாங்களே வீதிகளில் நின்று வெளியூர்களில் இருந்து வந்தவர்களை அழைத்துச் சென்று விருந்து வைப்போம்’’ என்று கூறினர்.