கோவை: பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை விபத்துகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகின்றன. நம்மில் பலருக்கும் அடிப்படை சாலை விதிகள் தெரிந்திருந்தாலும், போக்குவரத்து காவலர்கள் நின்றிருப்பதை பார்த்த பிறகே சீட் பெல்ட்டும், தலைக்கவசமும் அணியும் பலரை காண முடியும். இவர்கள் ஒரு ரகம் என்றால், செல்போனில் பேசுவது தெரியக்கூடாது என்பதற்காக, அதை தலைக்கவசத்துக்குள் மறைத்து வைத்து சாலையில் பேசியபடியே கவனமில்லாமல் செல்வோர் இன்னொரு ரகம். இவ்வாறு விதிமீறுவோர் மட்டுமே விபத்தால் பாதிக்கப்படுவதில்லை.
தங்கள் மீது தவறில்லாதபாதசாரிகளும், எதிரே வரும் வாகனஓட்டிகளும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு விபத்தை பாடமாகக் கொண்டு, 'விழி' எனும் அமைப்பை ஏற்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த வி.எஸ்.சுரேஷ்குமார். அவர் கூறியதாவது: ஒரு வழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், நான்சென்ற வாகனத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் எனக்கு தலையில் அடிபட்டது.அந்த நேரத்தில் நான் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.
இருவர் மீதும் தவறு இருந்தது. தலைக்கவசம் அணிந்திருந்தால் எனக்கு அடிபட்டிருக்காது. எனவே, இதிலிருந்து பாடம் கற்று, 'விழி' என்ற அமைப்பை கடந்த 2015-ம் தேதி தொடங்கினேன். இதன்மூலம் கோவையில் உள்ள முக்கிய சந்திப்புகள்,பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்களில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இதற்காக தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் ஒதுக்குகிறேன். தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், நான்கு சக்கர வாகனத்தில் 'சீட்பெல்ட்' அணிவதன் பாதுகாப்பு, ஒரு வழி பாதையில் எதிர்திசையில் வந்தால் ஏற்படும் ஆபத்து, சிறுவயதில் பக்குவம் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் சிறுவர்களுக்கு அதன் ஆபத்தை எடுத்துரைத்தல், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகனங்களில் ஏன் ஒளிரும் பட்டையை ஒட்டியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்குகிறோம்.
விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது, சாலை விதிகளை சரியாக கடைபிடிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், சீட்பெல்ட், தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு துணிப்பை, புத்தகங்கள், குழந்தைகளாக இருந்தால் பொம்மை போன்ற பரிசுகளை வழங்கி வருகிறோம். எங்களின் இந்த பணிக்கு காவல்துறையினர் உறுதுணையாக உள்ளனர்.
இதுதவிர, எங்களது சமூக வலைதள பக்கங்களில் நாங்கள் பதிவிடும் வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு பெற்றபலர், இதை பார்த்து சாலை விதிகளைகடைபிடித்ததால் விபத்துகளில் இருந்துதப்பித்ததாக பின்னூட்டமிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சாலை விபத்தால்ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதத்தை குறைக்க, எங்களை போன்றே அனைத்து ஊர்களிலும் உள்ள இளைஞர்கள் இவ்வாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தமுன்வர வேண்டும் என்பது தான் எங்களின்எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.