வாழ்வியல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் காளைகள்

ஆ.நல்லசிவன்

பழநி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பழநி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல் உள்ளிட்ட தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பில்லம நாயக்கன்பட்டி, நத்தம், உலகம்பட்டி, தவசிமடை, கொசவபட்டி, பழநி என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம்.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பழநி நெய்க்காரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியில் மண் குத்துதுல், நீச்சல், நடை மற்றும் மூச்சுப் பயிற்சி, வாடிவாசலில் மாடுபிடி வீரர்களை கண்டு மிரளாமல் களத்தில் சீறிப்பாய்வதற்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்கவும் காளைகளுக்கு கடுமையான பயிற்சி அளித்து வருகின்றனர்.

இது குறித்து காளை வளர்ப்பவர்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வசதியாக, காளைகளின் உடல் வலிமைக்காக பருத்தி, உளுந்து, துவரம், பழங்கள் என ஊட்டமளிக்கும் உணவுகள் வழங்கப் படுகின்றன. தினமும் மண் குத்துதல், நீச்சல் மற்றும் நடைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் காளைகளை அழைத்துச் செல்கிறோம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்பார்த்து மும்முரமாக காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT