உதகை: நோய் வரும் முன் காக்கும் முறையை தோடர்கள் காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர். இதற்காக, உப்பு சாஸ்திரம் என விழாவே எடுத்து கொண்டாடுகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 பண்டைய பழங்குடியினரில் தோடர்களும் ஓர் இனம். கால்நடை வளர்ப்பை தொழிலாக கொண்டவர்கள். தோடர் பழங்குடியின மக்கள் தங்களது கோயில்களுக்கு கூரை மாற்றும் ‘பொலிவெய்த்’ திருவிழா, புத்தாண்டை வரவேற்கும் ‘மொற்பர்த்’ திருவிழா மற்றும் திருமணம் தொடர்பான வில் அம்பு சாஸ்திரம் என பல விழாக்களை எடுக்கின்றனர். எருமைகளை தங்களின் தெய்வமாகவழிபட்டு வருகின்றனர்.
அனைத்துவிழாக்களிலும் எருமைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதனால்,எருமைகளுக்கென்று பிரத்யேகமாக‘உப்பு சாஸ்திரம்’ என்ற விழாஎடுத்து கொண்டாடி வருகின்றனர்.இந்தவிழா, தங்கள் கால்நடைகளை கோமாரி உட்பட பிற நோய்களிலிருந்து காக்க கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கிராமங்களிலும், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராமங்களிலும் விழாநடத்தப்பட்டது. வளர்ப்பு கால்நடைகளிலிருந்து வன விலங்குகளுக்கு கோமாரி நோய் பரவாமல் இருக்கவேஇந்த ஏற்பாடு. ஆனால், தோடர்கள் காலங்காலமாக கோமாரி நோயை இயற்கையாகவே தடுக்க உப்பு சாஸ்திரம் விழா நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக உதகையிலுள்ள தலைமை மந்தை சேர்ந்த தோடர் பழங்குடியின தலைவர் பி.ராஜன் கூறியதாவது: தோடர் பழங்குடியின மக்களின் முக்கிய விழாவான ‘மொற்பர்த்’, எங்களின் தலைமையிடமான உதகை அருகே முத்தநாடு மந்தில் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு நான்கு நாட்களுக்கு பின்னர், அங்கேயே எருமைகளுக்கு உப்பு நீர் வழங்கும் ‘உப்பர்த்’ நடைபெறும். இதற்காக, அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி, அதில் நீர் நிரப்பப்படும். பின்னர், அதில் கோயில் பூசாரி உப்பை கொட்டுவார். முதலில் கோயில் எருமைகளை உப்பு நீர் பருக அனுமதிப்பார். அவை குடித்து முடித்த பின்னர், ஒவ்வொருவராக தாங்கள் வளர்க்கும் எருமைகளை உப்பு நீர் குடிக்க வைப்பர்.
உப்பு நீர் முக்கியத்துவம்: பழங்காலத்தில் உதகையில் ஆண்டுக்கு 9 மாதங்கள் கன மழை பெய்து கொண்டே இருக்கும். அப்போது, எங்கள் எருமைகளுக்கு வாய், கால்களில் புண் ஏற்பட்டு குணமாகாமல் மடிந்தன. இதற்கு என்ன காரணம் என புரியாமல் இருந்தபோது, வனங்களில் விலங்குகள் ஒரு வகை மண்ணை உண்பதை முன்னோர்கள் பார்த்துள்ளனர். இந்த மண்ணில் உப்பு சுவை இருந்துள்ளது. அந்த மண்ணை பாதிக்கப்பட்ட எருமைகளுக்கு வழங்கியபோது, அவை குணமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், நோய் பாதிக்கப்பட்ட எருமைகளுக்கு அந்த மண்ணை வனத்திலிருந்து எடுத்து வந்து கொடுத்து வந்துள்ளனர். காலப்போக்கில் உப்பு எளிதாக கிடைத்த பின்னர், உப்பை நீரில் கரைத்து எருமைகளுக்கு வழங்குவதை பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வன விலங்குகளும், உப்பு மண்ணும்.. தோடர்கள் கால்நடைகளுக்கு உப்பு நீர் வழங்குவதுபோல், வன விலங்குகளும் நோய் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க இயற்கையாகவே உப்பு உட்கொண்டு வருகின்றன என, நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அறக்கட்டளை அறங்காவலர் எம்.சிவதாஸ் கூறுகிறார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ''நோய் தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காக்க இயற்கையே உதவுகிறது. வனங்களிலுள்ள ஒரு வகை மண் உப்பு நிறைந்திருக்கும். இதை வனவிலங்குகள் அறிந்துள்ளன. தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அந்த மண்ணை தேடிச் சென்று உண்கின்றன. குறிப்பாக, யானைகள்இதை பின்பற்றுகின்றன. இந்த உப்பு சத்து,வன விலங்குகளை கோமாரி போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
வறட்சி காலங்களில் விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, வனங்களில் உப்பு போடப்படும். இதை ‘சால்ட் லிக்ஸ்’ என்றழைக்கின்றனர். இதை தோடர்கள் அறிந்துள்ளனர். எனவேதான், அவர்கள் தங்களின் எருமைகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, உப்பு நீர் வழங்கி வருகின்றனர். இதை உப்பு சாஸ்திரம் என்று ஆண்டுதோறும் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். அவர்களின் தெய்வ நம்பிக்கை, அறிவியல் உள்ளடக்கியதாக உள்ளது'' என்றார்.