சென்னை: வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழக கரையை நெருங்கி ஆந்திர மாநிலம் நோக்கி சென்று, தீவிர புயலாக வலுப்பெற்று அம்மாநிலத்தில் கடந்த டிச.5-ம் தேதி கரையை கடந்தது.
இதன் காரணமாக சென்னையில் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அதி கனமழை கொட்டித் தீர்த்தது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். குடிநீர், உணவு இன்றியும், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டும் கடும் அவதிக்குள்ளாயினர். சுமார் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. அப்பகுதிகளில் சிக்கியவர்களை 137 படகுகள் மூலம் மாநகராட்சி மீட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 53 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக 34 மாவட்டங்களில் இருந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக ரூ.17 கோடியே 60 லட்சம் மதிப்பில், 10 லட்சத்து 77 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 165 பிரெட் பாக்கெட்டுகள், 13 லட்சத்து 8 ஆயிரத்து 847 பிஸ்கட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர், 435 டன் அரிசி மூட்டைகள், 23 ஆயிரத்து 220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள், 82 ஆயிரத்து 400 போர்வைகள் மற்றும் லுங்கிகள்,
நைட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், குவளைகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. இவை சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தப் பொருட்கள் அனைத்தும் மாநகராட்சி மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டன.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை பெற்று, விநியோகிக்கும் பணியில் தேசிய மாணவர் படையினர் சத்தமின்றி முக்கிய பங்காற்றி இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த மாணவர்கள் கூறும்போது, "கல்லூரி மாணவர் பருவத்தில், துயரத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. போர் புரிவது மட்டுமே ராணுவப் பணி என்று நினைத்திருந்தோம். உள்நாட்டு இயற்கை பேரிடரிலும் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பங்கு முக்கியம் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம்.
இந்த வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணியில் நாங்கள் ஈடுபட்டதை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். இந்த வாய்ப்பை வழங்கிய தேசிய மாணவர் படை இயக்குநரகம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.