மதுரை: இல்ல விழாக்கள், அரசு மற்றும் தனியார் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் வரவேற்பு கோலங்கள் இடுவதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்பதோடு, கோலம் இடத் தொியாத பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவசப் பயிற்சியும் அளித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த கோலப் பயிற்சியாளர் கிருஷ்ணவேணி. மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி கிருஷ்ணவேணி (47). இவர் பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்துள்ளார். அழகழகாக கோலமிடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், தற்போது அதை கைத்தொழிலாகவே மாற்றியுள்ளார்.
இல்ல விழாக்கள், பொதுநிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் வரவேற்பு கோலங்கள் இடுவதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். இதுகுறித்து கோலமிடுவதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், இயற்கையை காப்பதன் அவசியம், பாலித்தீன் பொருட்கள் ஒழிப்பு, எய்ட்ஸ், கரோனா உள்ளிட்டவை தொடர்பான மருத்துவ விழிப்புணர்வு கோலங்களையுமிடுகிறார். அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று ஆர்வமுள்ள மாணவி களுக்கு கோலமிடுதல் பற்றி பயிற்சியும் அளித்து வருகிறார்.
இதுகுறித்து கோலப் பயிற்சியாளர் ஆர்.கிருஷ்ணவேணி கூறியதாவது: எனக்கு பூர்வீகம் கும்பகோணம். திருமணத்துக்கு பின்பு மதுரைவாசியாக மாறினேன். பள்ளியில் படிக்கும்போதே எனது 4 சகோதரிகளிடமிருந்து கோலமிடுவது குறித்து கற்றுக்கொண்டேன். கோலமிடுவதும் ஒருவகை கலைதான். யோகா போன்று மனதை ஒருமுகப்படுத்தினால்தான் சிறப்பாக கோலமிட முடியும். அதிகாலையில் எழுந்து கோலமிடுவது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தற்போது கோலமிடும் பழக்கம் பெண்களிடையே குறிப்பாக நகர்ப்புறத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே குறைந்து வருகிறது. நான் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கோலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
அப்போது மாணவிகளில் பலர் நான் வரைந்த கோலத்தை பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் தங்களால் கோலமிட முடியவில்லை எனவும், போதிய பயிற்சி, பழக்கமில்லாததால் சிரமப்படுவதாகவும் வருத்தப்படுகின்றனர். அத்தகையவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். விளையாட்டாக தொடங்கிய நிகழ்வு தற்போது கைத்தொழிலாகவே மாறிவிட்டது. என்னுடைய கோலங்களை பார்த்து அரசு விழாக்கள் மற்றும் தனியார் நிறுவன விழாக்களில் வரவேற்பு கோலமிடுவதற்கு அழைக்கின்றனர். கரோனா காலத்தில் வெற்றிலை, மாவிலை, மிளகு, மிளகாய் வற்றல், எலுமிச்சம்பழம் ஆகியவற்றுடன் கல் உப்பு கலந்து கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உப்புக் கோலமிட்டேன். அது பலரிடம் வரவேற்பை பெற்றது. கோலங்களில், வரவேற்பு கோலங்கள், விழிப்புணர்வு கோலங்கள், படிக்கோலம், பூக்கோலம், உப்புக்கோலம் என பலவகை உள்ளது.
இதுவரை 300-க்கும் மேற்பட்ட இடங்களில் கோலங்கள் இட்டுள்ளேன். சில தனியார் நிறுவனங்களின் இலச்சினையையும் கோலமாக வரைந்து தருகிறேன். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எனது வரவேற்பு கோலத்தை பார்த்து வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.