மதுரை: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் உலகின் பல நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பழமையான கேமராக்களைச் சேகரித்ததுடன் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் தொடர்பான 5 லட்சம் புகைப்படங்களை எடுத்து சாதித்துள்ளார். வெளிநாட்டில் அரசுப்பணியில் இருந்துகொண்டே அசத்தும் மகனுக்கு எஸ்பி.யான தந்தை பேருதவியாக உள்ளார். மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பி.நீரஜ் குமார் (27). இவரது தந்தை மதுரை 6-வது பட்டாலியன் எஸ்பி. என்.பாஸ்கரன். அபுதாபியில் அந்நாட்டு தேசிய ஆயில் நிறுவனத்தின் பொறியாளராகப் பணியாற்றுகிறார் நீரஜ்குமார். இவர் பழமையான கேமரா சேகரிப்பில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 500 கேமராக்களை சேகரித்து, தனது வீட்டில் அலங்கரித்து வைத்துள்ளார். புகைப்படம் எடுக்கும் ஆர்வம் காரணமாக விலங்குகள், பறவைகள், பூச்சியினங்களை ரசித்து 5 லட்சம் புகைப்படங்கள் வரையில் எடுத்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து நீரஜ்குமார் கூறியதாவது: பிளஸ் 2 வரையில் தந்தை பணி யாற்றும் பல்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வியைப் பெற்றேன். பொறி யியல் கல்வியை விருதுநகர் காமராஜர் கல்லூரியில் முடித்தேன். 10-ம் வகுப்பு படித்தபோதே எனக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. தந்தையின் கேமராவை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். இதில் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க வீடு, பிறந்த ஊர், காடு, மேடு, மலைகள் என வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்தேன். இதனால் கேமராக்கள் மீதான பார்வை அளவுகடந்த காதலாக மாறியது. வேறு வேறு கேமராக்களை பயன்படுத்தி படங்களை எடுத்து துல்லியமான பட நுணுக்கங்களை ரசித்தேன். இதுவே நாளடைவில் கேமரா தேடலை ஊக்கப்படுத்தியது.
2013-ம் ஆண்டு மதுரை பழைய சந்தையில் ரூ.750-க்கு பழமையான முதல் கேமராவை வாங்கினேன். அப்போது தொடங்கிய கேமரா கொள்முதல் பயணம் 10 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பழமையான கேமரா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தால் விடமாட்டேன். மும்பை, டெல்லி, ஆக்ரா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பழமையான கேமராக்களை வாங்கிச் சேமித்து வருகிறேன். கேமரா ஒன்றின் விலை ரூ.50 முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். பொறியியல் படிப்பு முடிக்கும் வரை கேமரா வாங்க தந்தை உதவி செய்தார். அபுதாபியில் அந்நாட்டு அரசு ஆயில் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியில் சேர்ந்ததும் வீட்டின் உதவியை பெறவில்லை. எனது ஊதியத்தின் ஒரு பகுதியிலிருந்து தொடர்ந்து கேமராக்களை வாங்கினேன். 10 ஆண்டுகளில் 500-க்கும் அதிகமான கேமராக்களை வாங்கி வீட்டில் பாதுகாத்து வருகிறேன்.
1803-ம் ஆண்டு முதல் தற்போது புழக்கத்தில் உள்ள டிஜிட்டல் கேமராக்கள் வரை என்னிடம் உள்ளன. இதில் Rolleiflex, Mamiya, Agfa, Minotla, Zeissikon, Voigtlander, Kodak, Coromet, Pentex, Ensign etc என பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் அடங்கும். லாங்கர் பார்மேட் வுட் அன்ட் பிராஸ் கேமரா, பாக்ஸ், ஸ்டீரியோ, பெல்லோஸ், டிவின் லென்ஸ், 35 எம்எம் ரேன்ஞ் பைன்டர், பாக்கெட் பில்ம், பொலாரைஸ்டு, எஸ்எல்ஆர் முதல் டிஎஸ்எல்ஆர் வரை என வித விதமான கேமராக்களை சேகரித்துள்ளேன். வீட்டில் இதற்கென தனி அறையை ஒதுக்கி பொக்கிஷம்போல் பாதுகாக்கிறேன். இந்த கேமராக் கள் செயல்படும் வகையில் இருந் தாலும், எஸ்க்ரே பிலிம், பிலிம் ரோல், இதை கழுவும் பழைய தொழில்நுட்பங்கள் தற்போது இல்லாததால் பயன்படுத்துவதில்லை. தற்போதுள்ள கேமராக் களை வைத்தே படம் எடுக்கிறேன். மலைப் பிரதேசங்கள், சிறப்பு உயிரினங்கள் வாழும் பகுதியைத் தேடிச் சென்று ஏராளமான படங்களை எடுத்து வருகிறேன்.
எனக்கு அபுதாபியில் 42 நாள் வேலை, 21 நாட்கள் விடுமுறை. இதனால் விடுமுறையில் மதுரை வந்து ஊர், ஊராகச் சென்று படங்களை எடுத்து வருகிறேன். பிலிம் ரோல்கள், ஹார்ட் டிஸ்க்குகளில் படங்களைச் சேமித்து வைத்துள்ளேன். சுமார் 5 லட்சம் படங்கள் வரையில் இருக்கும். இன்ஸ்டாகிராமில் பதிவு செய்கிறேன். எனது படங்களை நானே ரசித்து, புதிய புதிய கோணங்களில் எடுக் கிறேன். ரூ.8.5 லட்சம் மதிப்புள்ள கேமரா லென்ஸ் வாங்குவது, ரூ.5 லட்சம் செலவானாலும் கென்யாவில் வனச் சுற்றுலா சென்று படம் எடுப்பது, சர்வதேச புகைப்படக் கண்காட்சிகளில் பங்கேற்று திறமையை நிரூபிப்பது, உலகின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞரில் ஒருவன் என்ற நிலையை அடைவது என பல கனவுகளுடன் எனது பயணம் தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தந்தை எஸ்பி என்.பாஸ்கரன் கூறுகையில், ‘மகனின் ஆர்வத்துக்கு தொடக்கம் முதலே துணை யாக இருக்கிறோம். அவரது லட்சியப் பயணத் திலிருந்து விலகாத சூழலில், அரசுப்பணி..நல்ல ஊதியம் என எங்களின் ஆசையையும் பூர்த்தி செய்துள்ளது பெருமையாக உள்ளது. மகன் தனது வருமானத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராக்களை சேகரித்துள்ளார். அவரது லட்சியத்தை அடைய இறுதிவரை ஊக்கப்படுத்துவது எங்களின் கடமை’ என்றார்.