பெங்களூரு: கர்நாடகாவில் திப்பேஷ் என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் சோகமடைந்த நாய், அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதியை சேர்ந்தவர் திப்பேஷ் (21). இவர் கடந்த 16-ம் தேதி இரவு அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது திடீரென தெரு நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து திப்பேஷின் தாய் யசோதாம்மா கூறும்போது, ‘‘என் மகனின் உயிரிழப்புக்கு தெரு நாய் தான் காரணம். வாயில்லாத ஜீவன் மீது நாம் கோபப்பட முடியுமா? ஆனால் அந்த நாய், திப்பேஷின் இறுதி ஊர்வலத்தில் சுடுகாடு வரை பின்தொடர்ந்து வந்தது.
அதன் பிறகு எங்களது வீட்டுக்கு வந்து எனது கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டது. இது மகனின் மரணத்துக்காக, அந்த நாய் மன்னிப்பு கேட்பதைப் போல இருந்தது. இப்போது அந்த நாயை எங்களது வீட்டில் வளர்த்து வருகிறோம்'' என்றார்.