படங்கள்: எஸ்.சத்தியசீலன் 
வாழ்வியல்

சிறிய விதிமீறல்கள்கூட பெரிய விபத்தை ஏற்படுத்துவது எப்படி? - மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘போக்குவரத்து பூங்கா’

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னையில் ‘போக்குவரத்து பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு தமிழகத்தில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன. உயிரிழப்பில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் இருந்தாலும், 2-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு இந்தியா முழுவதும் 4 லட்சத்து 61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 1 லட்சத்து 68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 36,366 பேர் காயம் அடைந்துள்ளனர். 2021-ஐ ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதையடுத்து விபத்து உயிரிழப்புகளை குறைக்க அனைத்து மாநிலங்களும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, சென்னையிலும் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, போக்குவரத்து விதிமுறைகள், அதை மீறுவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பள்ளி பருவத்தில் உள்ள ‘டீன் ஏஜ்’ மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் பிற்காலத்தில் அவர்கள் வாகனங்களை இயக்கும்போது அல்லது சாலைகளை பயன்படுத்தும்போது போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வாய்ப்பு ஏற்படும் என போக்குவரத்து போலீஸார் நம்புகின்றனர். இதை மையமாக வைத்து, சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவ, மாணவிகள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் நேப்பியர் பாலம் அருகே பிரத்யேகமாக ‘போக்குவரத்து பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுக்கு மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

அனுபவம் வாய்ந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து வார்டன்கள் மாணவ, மாணவிகளுக்கு ‘மின்னணு கண்காட்சி’ மூலம் சாலைப் பாதுகாப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி கற்பிக்கின்றனர். விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது. இதன்மூலம் சிறிய கவனக்குறைவு அல்லது போக்குவரத்து விதி மீறல்கள் கூட பெரிய அளவிலான சேதத்தை அல்லது விபத்தை ஏற்படுத்துவது எப்படி என மாணவர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சாலைகளுக்கு அழைத்து சென்றும் போக்குவரத்து விதிகள் குறித்து சொல்லி கொடுக்கப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள
‘போக்குவரத்து பூங்கா’.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறும்போது, ‘மாணவர்கள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வதோடு, மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கும் வகையிலும் அவர்களை தயார் செய்து வருகிறோம். ஆண்டுதோறும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் 3,700 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். காவல் வாகனத்திலேயே மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்கிறோம். வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துகிறோம். இதன்மூலம் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பார்கள். பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றை மாணவ பருவத்திலிருந்தே தடுக்க முடியும் என நம்புகிறோம்’ என்றனர்.

சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறும்போது, ‘விபத்து உயிரிழப்பு, நெரிசலை குறைக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒருபகுதியாக பள்ளி பருவத்தில் இருந்து மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள், அதை மீறுவதால் ஏற்படும் விபரீதம் குறித்து சொல்லி கொடுத்தால், வீடியோ மூலம் காண்பித்தால் அது அவர்கள் மனதில் ஆழமாக பதியும். இதன்மூலம், பிற்காலத்தில் அவர்கள் விதிமீறல்களில் ஈடுபட மாட்டார்கள் என நம்புகிறோம். அதை மையமாக வைத்தே 'போக்குவரத்து பூங்கா' அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT