அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் குப்பையை தரம் பிரித்து, மண்புழு உரம் தயாரிக்க கொட்டகை மற்றும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றில் மக்கும் குப்பையை மண்புழு உரமாக தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அனைத்து கிராமங்களிலும் கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால், இதற்காக அமைக்கப்பட்ட கொட்டகைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
காரணம் என்ன? - தூய்மைப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று குப்பை சேகரிக்கும்போது பலரும் குப்பையை தரம் பிரித்து தராததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், சிலர் குப்பையை ஒதுக்குபுறமான இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் தான் இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியவில்லை என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘மாவட்டம் முழுவதும் பயன்பாடின்றி உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகைகளை சீரமைக்க 15-வது மானியக்குழுவின் கீழ் ஊராட்சிகளின் மக்கள்தொகைக்கேற்ப ரூ.48 ஆயிரம் முதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் விரைவில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்’’ என்றார்.