குமுளி: தேனியில் இருந்து 63 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமுளி. மாவட்டத்தின் தெற்குப் பகுதியான இந்த ஊர் கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டாகவும், பரந்து விரிந்த ஆண்டிபட்டி தொகுதியின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இங்கிருந்துதான், கேரள மாநில எல்லை தொடங்குகிறது. குமுளிக்கு லோயர்கேம்ப் வரை தரைப் பகுதியிலும், அங்கிருந்து 7 கி.மீ. மலைப் பாதையிலும் செல்ல வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கூடலூர், லோயர்கேம்ப் அமைந்துள்ளதால் கேரளாவுக்கே உரித்தான தனித்துவமான பருவநிலை இங்கு நிலவுகிறது.
இந்த லோயர்கேம்ப்பில்தான் தமிழக எல்லையின் முதல் டீ கடையாக ராவ்ஜி டீ கடை அமைந்துள்ளது. மலைச்சாலையில் பயணித்து களைத்து வருபவர்களுக்கு உற்சாக ஊக்கியாக இந்த தேநீர் கடை உள்ளது. அதேபோல் கேரளா நோக்கி செல்பவர்களுக்கு தமிழகத்தின் கடைசி டீ கடை என்ற பெயரையும் பெற்றுள்ளது. இங்கிருந்து மலைச்சாலை தொடங்குவதால் இக்கடையை கடந்து விட்டால் கேரளாவில்தான் டீ குடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. பல தலைமுறைகளுக்கு முன்பாக மகாராஷ்டிராவில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கடையை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இக்கடை உரிமையாளர் ராமதாஸ்ராவ் கூறியதாவது: சரபோஜி மன்னர் காலத்திலேயே எங்கள் மூதாதையர்கள் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். அப்போது சுங்கவரி வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். உத்தமபாளையத்தில்தான் எங்கள் மூதாதையர் குடியிருந்தனர். பிங்கோஜிராவ் வகையறா என்று கூறினால் இப்பகுதி முதியவர்களுக்கு தெரியும். ஆங்கிலேயர் எங்கள் மூதாதையர் பெயரில் நிலம், நெற்களம் போன்றவற்றை தானமாக அளித்தனர்.
இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடை வைத்துள்ளோம். தமிழக எல்லையின் முதல் டீ கடை என்பதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பலருக்கும் எங்களைத் தெரியும். மலைப் பயணத்தில் வாந்தி, உடல்நலக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பலரும் இங்கு ஓய்வு எடுத்துச் சென்றுள்ளனர். முந்தைய தலைமுறை அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் இங்கு வந்துள் ளனர். வாடிக்கையாளர் களின் வேண்டு கோளுக்காக தற்போது உணவகத்தையும் நடத்தி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து வாடிக்கையளர்கள் கூறுகை யில், பல ஆண்டுகளுக்கு முன்பு வனச்சாலை குறுகியதாக இருந்தது. மூடுபனி போன்ற காலங்களில் வாகனங்கள் அப்போது இந்த டீ கடை முன்பு பல மணி நேரம் நின்று செல்லும். சபரிமலை சீசன் நேரங்களில் இந்த கடை பரபரப்பாக இருக்கும் என்றனர். தமிழகத்தின் எல்லையாகவும் அதீத குளிரின் தொடக்கமாகவும் அமைந்துள்ள இப்பகுதியில் பலரின் உடல்நடுக்கத்தை குறைத்து மலையேற்றி வழி அனுப்பும் இக்கடை பலரின் நினைவுகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.