கடந்த 2016-ல் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் ஜூடோபியா. விலங்குகள் வாழும் உலகில் நரியும் (நிக்), முயலும் (ஜூடி) சேர்ந்து அதகளம் செய்திருக்கும். அதில் வரும் சில காட்சிகளை ரீக்ரியேட் செய்து அசத்தியுள்ளனர் வயதில் மூத்த தம்பதியர். அவர்களது வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் பார்வையை பெற்றுள்ளது.
இணைய வெளியில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் வரிசையில் இணைந்துள்ளனர் இந்த தம்பதியர்.
அச்சமாஸ் (Achamass) என்ற பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ மூலம் நிக் மற்றும் ஜூடிக்கு உயிர் கொடுத்துள்ளனர் இந்த தம்பதியர். இருவரும் எதேச்சையாக தங்களது ரியாக்ஷனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். இதில் அந்த பெரியவர் தனது கையில் மொபைல் போனில் செல்ஃபி வீடியோ ரெக்கார்ட் செய்கிறார். அவருடன் அந்த வீடியோவில் ஒரு பெண் இணைகிறார். இருவரும் இணைந்து க்யூட்டாக ஜூடோபியா காட்சிகளை ரீக்ரியேட் செய்துள்ளனர். ‘இது எங்கள் வெர்ஷன்’ என அதற்கு கேப்ஷன் கொடுத்து பகிரப்பட்டுள்ளது. இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இந்த வீடியோவை சுமார் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. முக்கியமாக நெட்டிசன்களை எமொஷனலாகவும் இது ஈர்த்துள்ளது.
‘இணையத்தில் இடம்பெற்றுள்ள வீடியோக்களில் மிக அழகானது’, ‘நான் மீண்டும் ஜூடோபியா பார்த்துக் கொண்டிருக்கிறேன்’, ‘மனம் நிறைந்தது’, ‘அழகு’, ‘அன்பு’ என நெட்டிசன்கள் இந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்துள்ளனர்.