புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான அம்சங்களில் மொய் விருந்தும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி வட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மொய் விருந்து விழா நடத்துவது வழக்கம். இங்கு, ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாகவோ அல்லது பலர் ஒன்று சேர்ந்தோ மொய் விருந்து நடத்தி, அதில், பங்கேற்பவர்களுக்கு கறி விருந்து பரிமாறி, மொய் தொகையை வசூலிப்பர். ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் மொய் வசூலாகும். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மொய் விருந்து விழா நடைபெறும்.
கறி விருந்து, மொய் வசூல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த விழாவை, பிறருக்கு சேவை செய்யவும் நடத்தலாம் என மொய் விருந்தை அர்த்தமுள்ளதாக்கியுள்ளார் டீ கடை உரிமையாளர் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அருகே மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார்(45). ஓராண்டாக புதுக்கோட்டை அருகே கேப்பறை பகுதியில் டீ கடை நடத்தி வரும் இவர், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில், கடந்த ஆண்டு மொய் விருந்து நடத்தி, அதில் வசூலான ரூ.16,000-ஐ தமிழக அரசிடம் வழங்கினார். இந்நிலையில், ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆடு, மாடு வாங்கித் தரும் நோக்கில் நேற்று மொய் விருந்து நடத்தினார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்ததுடன், டீ கடை அருகே பதாகையும் வைத்திருந்தார்.
மொய் செலுத்த பாத்திரம் வைக்கப்பட்டிருந்ததுடன், ஜிபே வசதியும் ஏற்படுத்தியிருந்தார். கடைக்கு வந்து மொய் தொகை செலுத்தியோருக்கு டீ, வடை இலவசமாக வழங்கப்பட்டன. இவர், வம்பன் நான்கு சாலைப் பகுதியில் டீ கடை நடத்தி வந்தபோது, 2018-ல் கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்கள் நிலுவை வைத்திருந்த ரூ.28,000-ஐ தள்ளுபடி செய்தார். பின்னர், கரோனா தொற்று பரவலின்போது, டீ கடையில் மொய் விருந்து நடத்தி வசூலான ரூ.20,000-ஐ தமிழக அரசிடம் வழங்கினார்.
மொய் விருந்து குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சிவக்குமார் கூறியது: மொய் விருந்து மூலம் கிடைத்த ரூ.41,747 தொகையுடன், ஒரு நாள் டீ, வடை வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தையும் சேர்த்து, வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு வெள்ளாடு, கறவை மாடு வாங்கி வழங்க உள்ளேன். இந்தப் பணியை தனியொரு ஆளாக இல்லாமல், வாடிக்கையாளர்களுடன் கூட்டு முயற்சியாக செய்து வருகிறேன் என்றார்.
பசுமை சாம்பியன் விருது பெற்றவர்: கஜா புயலால் மரங்கள் முறிந்து பாதிக்கப்பட்ட கடை வாடிக்கையாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய சிவக்குமார், மரக்கன்றுகளை சிறப்பாக வளர்த்தோருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். இப்போதும், அவ்வப்போது மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.
இதனிடையே, கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், சிவக்குமாருக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சம் காசோலையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.