வாழ்வியல்

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக புல்லட் - கீழ்கோத்தகிரி எஸ்டேட் உரிமையாளர் அசத்தல்

ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரி: ‘கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்’, தற்போது இதுதான் கீழ் கோத்தகிரி எஸ்டேட் ஊழியர்களின் மைண்ட் வாய்ஸ். தங்களது முதலாளி தீபாவளி போனஸாக வழங்கிய புல்லட்களில் மாஸாக வலம் வருகின்றனர் ஊழியர்கள்.

தீபாவளி பண்டிகையின் போது அரசாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகையை போனஸாக வழங்குவது வாடிக்கை. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், கார், இருசக்கர வாகனங்கள் என யாரும் எதிர்பார்க்காத பரிசுகளை தீபாவளி போனஸாக அளித்து திக்கு முக்காட செய்வார்கள்.

அடுத்த வாரம் தீபாவளி கொண்டாடப்படும் நேரத்தில், ஊழியர்கள் தீபாவளிக்கு போனஸ் எப்போது வரும் என்று, மொபைல் போனில் குறுஞ் செய்தியை பார்க்கிற நேரம் இது. ஆனால், கோத்தகிரியிலுள்ள எஸ்டேட்டில் அதன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார் அந்த எஸ்டேட் உரிமையாளர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசுகள் வழங்கி அசத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது எஸ்டேட்டில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை தீபாவளி போனஸாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஓட்டுநர்கள் முதல் மேலாளர் வரை எல்லோருக்குமே இருசக்கர வாகனங்களை போனஸாக வழங்கியிருக்கிறார். ஊழியர்களை அழைத்து உங்களுக்கான தீபாவளி பரிசு என இருசக்கர வாகன சாவிகளை ஊழியர்களிடம் வழங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், மகிழ்ச்சியில் திளைத்தனர்.

முன்னதாக, ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்து கொண்ட சிவகுமார், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ஒரு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர், ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமஹா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை புக் செய்து வரவழைத்துள்ளார்.

பின்னர், நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது பரிசு எனக் கூறி ஒவ்வொருவரிடமும் வாகனத்தின் சாவியை கொடுத்திருக்கிறார். இது தவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உட்பட எலெக்ட்ரானிக் பொருட்களையும், போனஸ் தொகையையும் வழங்க உள்ளார்.

இது குறித்து எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் கூறும்போது, ‘ சிவகாமி எஸ்டேட் கடந்த 2003ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்பும், பங்கும் உள்ளது. ஊழியர்களை கவுரவித்து ஊக்கமளிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன்.

இந்த ஆண்டு 15 ஊழியர்களை தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் பரிசுகளை வழங்குவேன். இதேபோல மற்ற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இதுபோன்று வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்’ என்றார்.

SCROLL FOR NEXT