மதுரை: பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டும் வகையில், சிறுதானிய உணவு தயாரிப்பு தொழிலில் மதுரை அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண் தொழில் முனைவோர் அசத்தி வருகிறார். ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் இவர் தயாரிக்கும் சிறுதானிய நொறுக்கு தீனிகளை மதுரை வரும்போதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பி சாப்பிடுகிறார்.
எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எட்., முடித்த தமிழ்செல்வி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கணவர் வெங்கடேஷ்குமார், விபத்தில் சிக்கியபோது அவருக்கு சத்துள்ள சிறுதானிய உணவுகளை தேடிப் பிடித்து வாங்கி கொடுத்தபோதுதான் அவற்றின் அருமை புரிய தொடங்கியது. அதனால் சிறுதானிய உணவு தயாரிப்பு தொழிலில் இறங்கி தற்போது சாதித்து கொண்டிருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சிறந்த சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி, இவரை டெல்லிக்கு அழைத்து, இவரது சிறு தானியத் தொழிலை பாராட்டி உலகளவில் சந்தைப்படுத்த ஊக்கப்படுத்தி அனுப்பினார். இதுகுறித்து தமிழ்செல்வி கூறியதாவது: தொடக்கத்தில் குடிசைத் தொழிலாகத்தான் வீட்டில் வைத்து சிறு தானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து விற்பனை செய்து வந்தேன். அதில் கிடைத்த வரவேற்பால் சிறுதானிய சத்துமாவு, கம்பு மற்றும் கேழ்வரகு தோசை மாவு போன்றவற்றை விற்பனை செய்தேன். அதன்பிறகு மதுரை கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தினேன்.
தற்போது கள்ளிக்குடியில் தனி யூனிட் தொடங்கி கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நான்கு வழிச்சாலை ஹைவே ஹோட்டல்களில் உள்ள அவுட்லெட் விற்பனையகங்களுக்கு சிறுதானிய உணவுகளையும், சிறுதானிய அரிசி ரகங்களில் பனி வரகு, மூங்கில் அரிசி, குதிரை வாலி போன்ற பாரம்பரிய அரிசி ரகங்களும், தினை பொங்கல், வரகு பொங்கல் உள்பட 80 வகையான உணவு தானிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.
அதுமட்டுமில்லாது பருப்புப்பொடி, கொள்ளு இட்லிப் பொடி போன்ற பொடி வகைகளும் தயாரிக்கிறோம். சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட லட்டு, சோள முருக்கு, தினை அதிரசம், ராகி குக்கீஸ் போன்ற பல்வகை சிறுதானிய பலகாரங்களும் விற்பனை செய்கிறோம். முதன்முதலில் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் குடிசை தொழிலாக தொடங்கி தற்போது வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் 75 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளேன். இதன்மூலம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறேன். நடுத்தர, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சிறுதானிய உணவு பொருட்களை ரூ.45 முதல் ரூ.325 என்ற அளவில் விற்கிறேன்.
எனது தயாரிப்புக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான தினம். எனது சிறுதானிய உணவு உற்பத்தியை கேட்டறிந்த பிரதமர் மோடி, அன்றைய நாளில் என்னை டெல்லிக்கு அழைத்து பாராட்டினார். நாடு முழுவதும் 13 பெண் தொழில் முனைவோர்களை அழைத்திருந்தனர். அதில் நான் உட்பட 2 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்தோம். அப்போது பிரதமருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நான் தமிழ்நாட்டில் இருந்து வந்ததாக சொன்னவுடன், ‘வணக்கம்’ என்று தமிழில் வரவேற்றார். என்னுடைய சிறுதானிய உணவுப்பொருட்களை ஆர்வத்தோடு கேட்டறிந்தார். மேலும் சிறுதானிய உணவுகளுக்கு உளகளவில் சந்தை வாய்ப்பு உள்ளதாக கூறி ஏற்றுமதி செய்கிறீர்களா? எனக் கேட்டார். மேலும் விற்பனையை விரிவுபடுத்துங்கள் எனக்கூறி வாழ்த்தினார்.
எங்களை அழைத்துப் பேசிய அடுத்த ஆண்டான 2023-ம் ஆண்டை சிறு தானிய ஆண்டாக பிரதமர் அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு எங்களுடனான சந்திப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழக முதல்வர், அரசுத் துறை உயர் அதிகாரிகளும் எங்கள் சிறுதானிய நொறுக்கு தீனிகளை விரும்பி சாப்பிட்டுள்ளனர். கீழடிக்கு முதல்வர் வந்தபோது எங்கள் தயாரிப்பு சிறுதானிய நொறுக்கு தீனிகளை வாங்கிச் சென்று கொடுத்தனர். அதுமுதல் முதல்வர் மதுரை வரும்போதெல்லாம் எங்கள் தயாரிப்பு சிறுதானிய நொறுக்குத்தீனிகள் அவருக்கு செல்கின்றன. அதுபோல அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களுக்கும் விரும்பி வாங்கி செல்கின்றனர். நாங்கள் விவசாயிகளிடம் நேரடியாக சிறுதானியங்களை கொள்முதல் செய்து, அவற்றை சுத்தப்படுத்தி பக்குவமாக அரைத்து ரசாயன கலப்பில்லாமல் இயற்கை முறையில் தயாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.