வாழ்வியல்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘வாக்கரூ’ நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும் ‘நற்சிந்தனை - நன்னடை’: நற்செயல்களைச் செய்யும் மாணவர்களுக்கான கவுரவ மேடை

செய்திப்பிரிவு

சென்னை: இன்றைய தலைமுறை மாணவர்கள் நற்சிந்தனையோடு நல்ல பல செயல்களையும் செய்துவருவது நாளைய சமுதாயத்துக்கான நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது. அப்படியான செயல்களைச் செய்யும் சிலரைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.

சாலை விதிகளை மதிப்போம்: தேனி மாவட்டம், போடி தேரடித்தெருவில் அமைந்துள்ள பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியின் 8-ம் வகுப்புமாணவர் மாரிச்செல்வம். போடியைச்சேர்ந்த இவர் தினமும் பள்ளிக்கு நடந்து வருகிறார். பள்ளி நான்கு சாலைசந்திப்பில் உள்ளதுடன், சாலை குறுகலாகவும் அமைந்துள்ளது. மேலும்தேனி - போடி சாலை என்பதால் வாகனங்கள் அதிகளவில் இப்பகுதியைகடந்து செல்கின்றன. இதனால்சாலையை கடந்து பள்ளிக்கு வரும்குழந்தைகளைத் தினமும் பாதுகாப்பாக சாலையின் மறுபக்கம் அழைத்து வருகிறார். முதியவர்களுக்கும் இவ்வாறு உதவி வருகிறார்.

பள்ளிக் கட்டிடம் உயரட்டும்: திருப்பூர் மாவட்டம், உடுமலையைஅடுத்துள்ளது சின்னவீரன்பட்டி அரசுநடுநிலைப் பள்ளி. 20 ஆண்டுகளாக9 வகுப்பறைகளுடன் இருந்த இப்பள்ளி ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் ரூ.1.30 கோடி செலவில் 12 கூடுதல் வகுப்பறைகளைக் கொண்ட 2 மாடி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இளநீர் வியாபாரி தாயம்மாள் வழங்கிய ரூ.1 லட்சம் தொடங்கி, ஊர் கூடி அனைவரும் இணைந்து ரூ.27 லட்சம் நன்கொடையாக இப்பள்ளிக்கு வழங்கியுள்ளனர். அப்பள்ளியில் தந்தையை இழந்து, தாயின் நிழலில் கல்வி பயின்று வரும் சாய்பிரசாத் - பிரதோஷ்குமார் மற்றும் பண்பரசன் - மகிழரசன் சகோதரர்களும், தங்கள் உண்டியல் சேமிப்புத் தொகையைப் பள்ளியின் கூடுதல் கட்டிட நிதியாக கொடுத்து உதவியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லிஅருகே சென்னீர்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத் திறனாளி மாணவரான ஜெரோனியா, 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்றஎண்ணம் ஜெரோனியாவுக்கு ஏற்பட்டது. உடனே, தனது உண்டியலில் சேமித்து வந்த ரூ.521-யை அப்பகுதி தேவாலய நிர்வாகம் மூலம் மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மாணவ, மாணவிகளே, இதுபோன்று நீங்கள் செய்துவரும் செயலைப் பற்றியும், இனி செய்ய நினைத்திருக்கும் செயலைப் பற்றியும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நீங்கள் செய்துவரும் சிறப்பான செயலைப் பலரும் அறிய வெளிச்சப்படுத்துவதற்கே ‘இந்து தமிழ் திசை’யும் ‘வாக்கரூ’ நிறுவனமும் இந்த ‘நற்சிந்தனை நன்னடை’ கவுரவ மேடையை அமைத்துள்ளது.

வாருங்கள்… நற்சிந்தனையோடு நன்னடை போடுவோம்.

நீங்கள் செய்துவரும் நற்செயலை எழுதி, அதற்கான படங்களையும் இணைத்து nne2023@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ‘நற்சிந்தனை – நன்னடை’, ஆசிரியர், இந்து தமிழ் திசை - நாளிதழ், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

SCROLL FOR NEXT