விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் இயற்கையாக அமைந்த வம்பா மணல் மேடுகள். குடியிருப்பு பகுதியை ஒட்டியிருக்கும் கடற்கரை.கழுவெளி பறவைகள் சரணாலயம் அமைய உள்ள பகுதி. மரக்காணம் மீனவப் பகுதி சிக்கலும் எதிர்பார்ப்புகளும்ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த செப். 30-ம் தேதி, 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இன்னும் என்னென்ன செயல்படுத்த வேண்டும்? மாவட்டத்தின் தற்போதைய சமூக, பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது? என்பதை தொடர்ச்சியாக நமது சிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, மரக்காணம் கடல் சார் பகுதிகள் குறித்து..
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சுனாமி வந்தது. 19 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய சோக சுவடுகள் இன்னமும் மறையவில்லை. இந்தசோக நிகழ்வில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கரை ஒதுங்கிய உடல்கள் 31. கரை ஒதுங்காமல் கடலோடு சென்றவர்களையும் கணக்கிட்டதில் உயிரிழந்தவர்கள் 71 பேர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் பலர் வீடு, வாழ்வாதாரத்துக்கான பொருட்களை இழந்து அவதிக்குள்ளாயினர். இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பில் நிரந்தர வீடுகள், மீன் பிடிவலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அப்போது ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தின் கடல் சார்ந்த பகுதி மரக்காணம்.
இந்த பேரூராட்சிக்குட்பட்ட அழகன் குப்பம் முதல் கூனிமேடுகுப்பம் வரையில் சுமார் 20 கி.மீ தொலைவுக்கு கடற்கரை பகுதி உள்ளது. இங்கு 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வசவன்குப்பம் கிராம மக்களை சந்தித்த போது அவர்கள் இயற்கை வளமாக உள்ள தங்கள் பகுதி அழிக்கப்பட்டு வருவதாக கவலையுடன் தெரிவித்தனர்.
“3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, இயற்கையாக உருவான ‘வம்பா மேடுகள்’ என அழைக்கப்படும் மணல் மேடுகள்தான் 2004 ஆழிப்பேரலையில் இருந்து இப்பகுதியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது. இந்த வம்பா மேடுகளை கரைத்து வருவதால், 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150 மீட்டருக்கு உள்ளே இருந்த கடல் தற்போது எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்துள்ளது. எங்கள் குப்பத்தை கடந்து, வம்பா மேடு எனப்படும் மணல் மேடுகள் இந்த கடற்கரையில் நீண்டு உள்ளது. இந்த மேடுகள் தனியார் நிலமாக இருந்தாலும், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் நீளத்துக்கு இப்பகுதியில் மணல் அள்ளக்கூடாது. இந்த மேடுகளை கரைக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால், இதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
மரக்காணம் பகுதி கடற்கரை பகுதியை ரிசார்ட்டுகள், சொகுசு பங்களா கட்ட நில வணிகர்கள் விற்பனை செய்து வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் லாரி, டிராக்டர் போன்றவற்றில் இப்பகுதியில் மணலை எடுத்துச் செல்கின்றனர். பல நூறு ஆண்டுகளாக இயற்கையாக இருந்த தாது மணல்கள் காணாமல் போய் வருகின்றன” என்று வசவன்குப்பம் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அலுவலர்களிடம் கேட்டபோது, “மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் குடிருப்புக்கான கட்டுமான பணிகள் அமைக்க எந்த அனுமதியும் அளிக்கவில்லை. மேலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலத்தை கிரயம் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சொத்துகளை ரிஜிஸ்டர் செய்யக்கூடாது என பதிவாளர் அலுவலகத்தில் பேரூராட்சி சார்பாக ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கின்றனர். மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களில் வசிக்கும் 14 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் 1,500 படகுகளை பயன்படுத்துகின்றனர். கடந்த ஆட்சியில் இவர்களுக்காக, அழகன்குப்பத்தில் ரூ. 261 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்’ என்று அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. மீன்பிடித் துறைமுகம் அமைய உள்ள இடத்தில் தனி நபரால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் இந்த திட்டத்துக்கான ஆய்வறிக்கையின் அடிப்படையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க மீன்வளத்துறை, வனத்துறையினர் ‘ஆட்சேபனை இல்லை’ என சான்றிதழ் வழங்கினர். ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக கடந்த 2021-ம் ஆண்டு டிச. 6-ம் தேதி தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டது. மத்திய ஆசியாவை கடக்கும் வலசைப் பறவைகளின் முக்கியமான தங்குமிடமாக கழுவெளி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சரணாலயத்தின் பரப்பளவு 5,151 ஹெக்டேர் ஆகும். மரக்காணம் அருகே அமைந்துள்ள நடுக்குப்பம், செய்யாங்குப்பம், செட்டிக்குப்பம், அனுமந்தை, ஊரணி, கீழ்புதுப்பட்டி, கூனிமேடு, திருக்கனூர், கிளாம்பாக்கம், கொழுவாரி மற்றும் வானூர் வட்டத்தில் உள்ள தேவனான்குட்டை, காரட்டை, கழுபெரும் பாக்கம் ஆகிய கிராமங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பறவை சரணாலயத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது.
கழுவெளி ஈரநிலத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க கடந்த அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், அண்மையில் வெளியான அரசாணையில், ‘கழுவெளியில் வருங்காலத்தில் எந்த விதமான, இயற்கைக்கு ஆபத்தைத் தூண்டும், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த இயலாது. கழுவெளியின் எல்லையில் இருந்து 10 கி.மீ சுற்றளவுக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக, கருதப்பட்டு (Eco-Sensitive Zone (ESZ)) பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் ஒன்றாக செயல்படும். கழுவெளிக்கு அருகே அமைந்திருக்கும் எடையான் திட்டு கழிமுகம் வரை இந்த உணர்திறன் மண்டலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன்பிடித் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இந்தப் பகுதியில் ஓடும் உப்புக்கழி சிற்றோடை தடுத்து நிறுத்தப்படும். கடற்பாசி புல்வெளிகள், சிப்பி பாறைகள் மற்றும் உப்பு சதுப்பு நிலங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு இந்தப் பகுதியில் மண் அரிப்புக்கு வழிவகை செய்து விடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மரக்காணத்திலுள்ள சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜெயகோபியிடம் பேசிய போது, “நாகை மாவட்டத்தில் 8 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. ஆனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி, அதையொட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை.
சுனாமிக்கு முன் இங்குள்ள மீனவர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்ததோ அப்படியே தற்போதும் உள்ளது. ஆண்டு தோறும் ஏற்படும் புயல் எச்சரிக்கையால், சம்பாதிப்பதை மொத்தமாக இழந்து வருகிறோம். மீன்பிடித் துறைமுகம் அமைந் தால் கொஞ்சம் முன்னுக்கு வரலாம். சுற்றுச்சூழல் காரணங்களை முன்வைத்து இந்த மீன்பிடித் துறைமுக திட்டத்தை ஒத்தி போடுவது எந்த வகையிலும் சரியாகாது. வளர்ச்சி, நகரமயமாக்கல் என்ற பெயரில் நகர் புறங்களில் பலவித அணுகுமுறைகளை கையாள்கின்றனர். இந்த மரக்காணம் பகுதியில் வம்பா மேடு உள்ளிட்டவை அழிக்கப்பட்டு வருகின்றன.
அதையெல்லாம் அரசு கண்டு கொள்வதில்லை. இயற்கையை பாதிக்காத வகையில் திட்டமிட்டு இப்பகுதி மீனவர்களுக்காக மீன்பிடித் துறைமுகத்தை அமைத்து தர வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை அரசு நிச்சயம் செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று தெரிவிக்கிறார். இதுபோல் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்...!
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் பெருந்திட்ட வளாக பூங்கா பணி!