மதுரை: பொதுவாக எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், எழுத்து ஆர்வம் என்பது எந்த நேரத்திலும் யாருக்கும் எழலாம். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இலக்கியம், வரலாறு தெரிந்தவர்கள் மட்டுமே எழுத்தாளராகலாம் என்றெல்லாம் ஒன்றுமில்லை என்பதற்கு உதாரணமாக, மதுரையில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று, தமிழ்நாடு மின் வாரியத்தில் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுக்குப் பின், ஓய்வின்றி எழுதும் பணியை தொடங்கியவர்தான், மதுரை அண்ணாநகர் சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டி.வி.சுப்பிரமணியன் என்ற டி.வி.எஸ்.மணியன்.
பணியின்போது நேரமின்மையால், பணி ஓய்வுக்குப் பின் பல கவிதை, கதைகளை எழுதியுள்ளார். இவர், நேரத்தை போற்றிடுவோம் - காலத்தை வென்றிடுவோம் என்ற கவிதை, மதுரை நகர கோயில்கள் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து டி.வி.எஸ்.மணியன் கூறியதாவது: மின்வாரியத்தில் அதிகாரியாக பணிபுரிந்தபோது,1984-ல் எழுத்து ஆர்வம் பிறந்தது. ‘ஊக்குவிக்க ஆள் இருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’ என்ற கவிதையை படித்தேன். இதன் பின்னரே என்னுள் கவிதைகள் அருவிபோல் கொட்டின. தொடர்ந்து, கவிதை, கட்டுரைகளை எழுதினேன்.
பணி ச்சூழல் காரணமாக, எனது படைப்புகளை புத்தகமாக வெளியிட வாய்ப்பில்லாமல் போனது. ஓய்வுக்குப் பிறகு, எனது டைரியை புரட்டிய நண்பர் ஒருவரின் தூண்டுதலின்பேரில், ‘ஆடிப்பட்டம் தேடிவிதை, நேரத்தை போற்றிடு வோம் - காலத்தை வென்றிடுவோம், உழைப்பில் உயர்வு, மழை பெற மரங்களை வளர்ப்போம், மதுரை நகர கோயில்கள், வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம், முயல்வோம் உயர்வோம் உள்ளிட்ட 14 நூல்களை எழுதியுள்ளேன்.
இவற்றில் பெரும்பாலானவை தன்னம்பிக்கை நூல்கள். ‘நேரத்தை போற்றிடுவோம் - காலத்தை வென்றிடுவோம்’ என்ற கவிதை நூலுக்கு, அமெரிக்க பல்கலைக்கழகம் விருது, சான்றிதழ் வழங்கியுள்ளது. புத்தக வாசிப்பு என்னை படைப்புத்திறன் என்ற அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. தமிழ், ஆங்கிலம் சவுராஷ்டிரா மொழிகளில் மொழி பெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளேன்.
எனது 3-வது புத்தகம் ஹைகூ கவிதை நூல். இதில் ஹைக்கூ எங்கே பிறந்தது, எங்கிருந்து வந்தது என்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த 1915-ம் ஆண்டிலேயே பாரதியார் ஹைக்கூ கவிதையை எழுதிவிட்டார். 1984-ம் ஆண்டிலிருந்து எழுதியவை, 2015 முதல் புத்தகங்களாக வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது, 25-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 14 கட்டுரைகளும் எழுதி வைத்திருக் கிறேன். இவற்றை புத்தகங்களாக கொண்டுவர முயற்சித்து வருகிறேன். அரசுத்துறையில் பெரியபதவியில் இருந்தாலும், எழுத்துகள் மூலமே எனக்கு வெளிச்சம் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்